Saturday 26 November 2016

தம்பியதிகாரம்

வகுத்திடும் இலக்கணம்
ஏதுமில்லை..
நம்மிடையே கணக்கு
வழக்கொன்றும்
பெரிதாயில்லை..

நானழுதிடும் தருணங்களில்
நீ நீர்க் கொள்கிறாய்
கண்களில்...
தவறிழைக்கும் வேளையில்
கண்டித்துவிட்டு
முதுகு கன்றுமளவு
என்னிடம் வாங்கியும்
கொள்கிறாய்...

நான் பிடுங்கித்
தின்னவெனவே
ஒரு பகுதி
ஒதுக்கி வைக்கிறாய்...
டியூசனுக்கு பின்னரான
என் தாமதிக்கும் வருகையில்
உயிர் பதைக்கிறாய்...

என் அலட்சியத்திலும்
உன் பிரியம்
செழித்து வளர்க்கிறாய்...

உனக்கான என்
பிரியங்கள் பின்னொரு
நாளுக்கென
அடைகாக்கப்படுவதை
நீ அறியாமலில்லை...
உன் அன்பும்
அளவிடப்பட்டு
செலவிடப்படுவதில்லை...

நமக்கான பகிர்தல்கள்
ஆயிரம் இருக்க,
நான் அக்கா வென்றழைக்க
முயன்றதில்லை...
நீயும் கேட்க
விழைந்தததில்லை...

              அன்பு குந்தானிக்கு
                      பிரியங்களுடன் உன்
                                உடன்பிறப்பு....

அவன் பார்வையில்....

கால் அரை ஒன்று
என எழுத்தின்
உச்சரிப்புக்கு மாத்திரையிட்ட
தமிழ்தான்..
உன் தும்மலுக்கும்
விக்கலுக்கும்
இலக்கண குறிப்பு
எழுத அறிஞர்
தேடிக் கொண்டிருக்கிறதாம்...

மானஸ்தி

வீராயி அக்கா
காணாம போச்சு

நல்ல நெடிய உயரம்
சிவப்புத்தோலு
உழைத்து தேய்ந்த உடம்பு
என்பு தோல்
போர்த்தியவளாய் இருப்பாள்
பின் நாற்பதில் இருந்தாலும்
வயசு தெரியாது
மகள கட்டிக்
குடுத்திட்டேகண்ணு னு
அவளா தா ஒருநாள்
சொன்னாள்
தினமும் எங்ககடைல
சரக்கு எடுப்பா
ஐயாயிரம் ஆராயிரம்னு
எடுத்து 100_150
பாக்கி சொல்லி
மறுநா நியாபகமா தருவா...
சிரிக்க பேசுவா
அவ்ளோ வாஞ்சை
தாடிச்சேரில இருந்து
தேனி வரும்போதெலாம்
அக்கா பேத்திய
பாக்காம போவ மாட்டா

அப்படி வந்தவதா
காணாம போனாளாம்..

வீராயி அக்கா
ரெண்டு நா கழிச்சு
சேட்டு தோட்டத்ல
பொணமா மிதந்தா...

அக்கா
மக கொலுசு
காணாம போய்
பின்ன பீரோ அடியில
கிடைச்சதா
அரசல்புரசலா
பேசிகிட்டாக!!!!!

தேவை ஒரு கவிதை

வாய்பிளந்த குழந்தை
தூக்கம்
பாய் ஒருபுறமும்
அவன் ஒருபுறமுமான
நடுநிசி கோலம்
இரண்டாம் ஆட்டம்
முடிந்து திரும்புகையில்
அவனுடனான பைக் பயணம்
யாரும் எழாத
முன்விடியலில்
பால்கனி சுவாசம்
நிறைந்து விழும் தொட்டி
நீரில் பைத்தியக்காரியின்
ஆனந்தக் குளியல்
அப்பா செருப்பைப்
போட்டு நடக்கும் குழந்தை
கடற்கரை மணலில்
கால் புதைய நடை
பிடித்த புத்தகத்துடனான
தனிமை
எதிர்பாராத தருணத்தில்
மகளின் முத்தம்
புத்தம்புதிய பாட
புத்தகத்தின் வாசனை
ஏதேதோ மனதில் ஓட...
ஏனோ கவிதை மட்டும்
தோணவேயில்லை!!!!

Friday 25 November 2016

தேவதைகள்

அழுத்தமாய் முகம்துடைத்து
மீண்டும் கண்ணாடியை மாட்டி
கண்கள் குறுக
மீண்டும் மீண்டும்
அதை படிக்கிறான் அவன்..
நம்பமுடியாத தன்மையை
முகம் காட்ட
நிராயுதபானியாய்
புலிமுன் நிற்கும்
மானாகத் தவிக்கிறான்..
 
திருமணமாகிய இந்த
இரண்டு வருடத்தில் அவன்
நிதானமாய் பிறழ்வதென்னவோ
இன்றுதான்...
'குடி'யும் குடித்தனுமுமாய்
அவனை சகித்த
அவன் மனைவி _இதோ
எடுத்தேவிட்டாள்
ஒரு முடிவு.. விவாகரத்து!!!

கருவண்டாய் மகன்
சூப்பிய விரலோடு
கண்முன் வந்துபோக
காலுக்குக் கீழே
பூமி நழுவி ஓடியது...
போதையில்லாது  அவன்
கால்பரப்பி விழுந்தான்..

மனைவி மகனுடனான நாட்கள்
வரிசைகட்டி நிற்க
சாராய வாசனை
மறந்துதான் போனான்..

ஒரு பொன்அந்திப் பொழுதில்
பழநியில் குதிரைவண்டியில்
தலை நிறைந்த மல்லிகைபூவோடு
மனைவி அவனை நெருங்கி
அமர்ந்து  வந்தது ..
மனைவி தூரமாகிபோன
ஒருநாளில் மகனை
கோயில் யானை பார்க்கத்
தூக்கிச் சென்றது..
போதை ஏறாத
அந்த ஆடிப் பெருக்கில்
காவிரி கரையில்
நிலாச்சோறு தின்றது...
உப்பிருக்கா பார் என்ற
மனைவியின் உள்ளங்கைப்பற்றி
நாவினால் கோலம்போட்டது...
மகனின் முதல் பிறந்தநாளன்று
மறு ஜென்மம் எடுத்ததாய்
மெய்யனைத்தது...

நினைவுகளின் ஏகாந்தத்தில்
சுவாசம் முழுதும்
அவள் வாசம் நிரம்ப
இந்த போதையே போதுமென
முடிவெடுத்து அவளுடனான
அடுத்த அத்தியாயத்திற்கு
தயாராகிறான்!!!!

தேவதைகள் எப்போதும்
தண்டிப்பதில்லை!!!