Sunday 11 November 2018

குட்டிக் கதை

இரண்டு நாளாக விடாத மழை..அவள் சாரலடிக்கும் வீட்டு பால்கனியில் நின்றவாறு ரோட்டினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...சற்று மேடாய் இருந்த ரோட்டிலிருந்து மழைநீர் பாய்ந்து வந்தது அச்சத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது. எப்படியும் முழங்கால் அளவு நீர் இருக்கும்.

      வேலைக்குப் போன கணவன் வேறு வீடு திரும்பல .யோசனையாய் இருந்தாள். அலைபேசலாமா வேண்டாமா என்று. கணவருடன் சிறு ஊடல். இரண்டு நாளாய் பேசவில்லை . அவன் வலிய பேசிய தருணங்களிலெல்லாம் முகம் திருப்பிக் கொண்டாள்.

       எதிர்வீட்டு குட்டி பாப்பா ஜன்னல் வழி மழைநீரை கையில் பிடித்து இவள் மேல் வீச ,இவள் பயந்ததாய் பாவனை செய்ய  இன்னும் சிறிது பொழுது கரைந்தது..

                    மழை இன்னும் வலுத்ததாய் தெரிந்தது . வீட்டிற்குள் வந்து கணவனுக்கு
 போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை . ஏதோ வயிற்றை பிசைய மீண்டும் பால்கனி ஓடினாள்.
        
             இருட்ட ஆரம்பித்து விட்டது. தூரமாய் தெரிந்த சற்று அகன்ற உருவம் ரோட்டின்  மேட்டு பகுதியை நோக்கி நகர்வது தெரிந்தது . கணவனின் சட்டை போல் தெரிய   கூர்ந்து பார்த்தாள். அவனே தான். ஆனால் என்ன அது ஒரு வளர்ந்த பையனை தூக்கிச் செல்கிறானே .. யாராக இருக்கும் ..

        கண்களை கசக்கி மீண்டும் பார்க்கிறாள் . அந்த பையன் கையில் குழந்தை போல் தெரிய அவளுக்கு புரிய ஆரம்பித்தது.. அவள் கணவன் தூக்கிச் சென்றது மேட்டுத் தெரு தனபாலையும் அவன் மகளையும் என்று .. தனபால் மூண்றடி உயரமே உள்ள குள்ளமான மனிதன் . அவனைத்தான் தூக்கி செல்கிறான் போலும் . மழைநீர் ஓட்டத்தில் தனபாலால் நடக்கமுடியாமல் போயிருக்கலாம். அதான் தூக்கிச் செல்கிறான் போலும்.

        சிறிது நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க அவள் கீழிறக்கி கதவு திறந்தாள். அவள் கணவன் தான் ..ஆவலாய் ஏதோ சொல்ல வாய் திறந்தவன் அவள் பேச மாட்டாளோ என்ற யோசனையோடு அவள் கையிலிருந்த துண்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

               வேகமாய் அவனைப் பின்தொடர்ந்த அவள் பின்னிருந்து அவனை அணைத்துக் கேவி அழ ஆரம்பித்தாள். பத்து வருடமாய் குழந்தை இல்லையே என்ற அவளுக்குள்ளிருந்த ஏக்கம் ஏனோ உடைந்து பெருக்கெடுக்க... காரணம் புரியாமல் அவன் உறைந்து நின்றான் ..