Sunday 24 September 2017

கொலு பொம்மையாகிய நான்!!

தோரண விளக்குகள்
கண்கூசச் செய்திட..
பஞ்சாயத்து நடந்திட்ட
ஆலமரம் அருகே
கூடி நின்ற பெரியோரையும்..
வேடிக்கை பார்த்திட்ட
ஊராரையும் சிரித்தபடியே
நான் கடக்க..

அருகே இந்திரலோகத்தில்
இந்திர சபையில்
ரம்பை ஊர்வசியின்
நடனம் அரங்கேறிக்
கொண்டிருந்தது..

அதன் எதிரே
ஊதாநிற ஆடையுடன்
இந்திய கிரிக்கெட்அணியும்
கண் கவர்ந்தது..

திடீர் திருப்பமாக
கல்யாண வீடொன்றின்
திருப்பூட்டு நிகழ்ச்சியும்
உள்ளம் நெகிழச்
செய்தது..

கண்மூடித் திரும்பிய
பொழுதில்..
அருகே உழவு வேலையோடு
விவசாய நிலமொன்று
பசுமை பொங்கிட
களைகட்டியது..

கயிற்றுக்கு அந்தப் பக்கம்
எட்டிப் பார்க்க
அகத்திய முனியோடு
முனிவர் கூட்டம்
தவக் கோலம்
கொண்டிருந்ததனர்..

மேல் வரிசையெல்லாம்
கடவுளரும்..
கீழ் வரிசையில்
வாத்தியக்காரர்களுமாய்..
அலங்கார நிலையில்
அழகிய மாதர்களுமாய்
கொலுப் படிகள்
கருத்தைக் கவர்ந்திட..

கருநிற தேகமோடு
கச்சையணிந்த
பெண்ணொருத்தி
கால் மேல் கால் போட்டு
சற்றே அதிக திமிர் கொண்ட
விழியோடு .
தலை சாய்த்து
வில்புருவம் உயர்த்தி..
குறியீடாய் ஏதோசொல்ல
நானும் ஒருமுறை
தலைசாய்த்து எனைப்
பார்த்துக் கொண்டேன்
எதிரே கண்ணாடியில்
தெரிந்த என்
நிழல் உருவத்தை!!!!

Thursday 21 September 2017

Letter to my buddy

அன்பிற்குரிய மாசிலன்...

நீ அதிகம் பேசாத நாட்களில் என் கற்பனை களம் காண்கிறது.. இன்னென்று அறியாத உணர்வுகளின் கூட்டணியில் பிரித்து பிரித்து புதிது புதிதாய் பொருள் காண்கிறேன் உன் அசைவுகளில்..  பொத்தி வைத்த  மிச்ச நினைவுகளை கலைத்துப் போட்டு புது அதிகாரம் தேடிப் பார்க்கிறேன்..

         சிதறாத வார்த்தைகளுக்கு கண்களே அதிகம் ஏக்கம் கொள்கிறது... உன் இதழோசையை இந்த செவி என்று பிரித்து பொருள் உணர்ந்தது... கண்கள் தானே உன் நவரசங்களையும்.. அள்ளிப் பருகியது..

    இங்கு உன் மௌனங்களின் பேரிரைச்சல் டெசிபல்.. கண்களுக்குத் தான் வலி தருகிறது.. இருப்பினும் மொழிந்துவிடாதே.. சற்றே என்னைக் காய்ந்து போகச்செய்.. செவியுணரா தருணங்களில்.. இதயம் உன்னை அதிகம் அறிவதாய் உணர்கிறேன்..

         விதவிதமாய் காதல் கற்கிறேன்.. இன்று இதோ உன் மௌனத்தில்...

                                                      காதலுடன்
                                                                  இவள்.....

Monday 18 September 2017

மறந்துபோனதே!!

காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே..

இரு போர்வை மூடியும்
தாளாத குளிர்...
மூக்கும் தன் பணி மறந்திட்டது
போன்ற சுவாசம்..
சுவாசம் அடைத்திட்டநாசியையும்
ஏமாற்றி ஒழுகிடும்மூக்கு..

அடித்த அலாரம் தாண்டி
தூங்கவிடாத கடமை
கை கால்களில்
செயற்கை புத்துணர்ச்சி தந்தது..

பருப்பு சோறும்
வெண்டைக்காய் கூட்டும்
கோவக்காய்பொரியலும்
டப்பாவை நிரப்ப..
காலை தோசை
தேங்காய்சட்னியுடன்
இணைந்தது...

ஆமாம்..
காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே...

ஒழுகிடும் மூக்கை
துடைத்திட பழைய
துணி கிழித்தெடுத்துக் கொண்டு
பணிக்கும் கிளம்பியாச்சு..
எரியும் கண்களும்
நடுங்கிடும் தேகமுமாய்
காய்ச்சல் கடமையாற்ற..
என் கடமை இயற்ற
இயலாது போனது...

ஆமாம்..
காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே...

ஒத்தையாய் போய்
ஊசிபோட்டு வீடு திரும்ப..
சாரலோடு மழை
வரவும் சரியாக இருந்தது..
காய்ந்திட்ட துணிகளை
அள்ளிப் போட்டு
பாதி நனைந்துபோன
நிலையில் சோஃபா வில் சாய
காய்ச்சல் நியாபகம் வந்தது..
இறுகும் தொண்டைக்கு
இதமாய் காபிகலக்கித்தரும்
கைக்காக ஏங்கியவாறு..
அடுப்படி நுழைந்தேன்..

ஆமாம்..
காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே...

Tuesday 12 September 2017

முத்தம்

கை மடித்து கன்னம் தாங்கிய நிலைகளில் கைகளும்...

வெகு சில நேரங்களில்
அருவாள்மனை
உரையாடலின் போது விரல்களும்..

சிரித்திடும் போதெல்லாம்
கண்களும்..

காலை அரைத்தூக்க வேளையில் கன்னக் கதுப்புகளும்..

எனை மறந்த நிலையிலான ரசிப்புகளில் கழுத்திடையும்..

என் பின்னரான நம் பைக் பயணங்களில் காதுகளும்..

உன் முத்தம் பெறும் பாக்கியம் பெறுகின்றன....

ஏக்கம்

அடுப்படி ஒழித்து
காலைக்கான
தயாரிப்புகளுக்கான
முன்னேற்பாடுகள்...

இடைவேளையற்ற
அவசரகதி நடையோட்டம்..
உப்பும் மஞ்சளும்
வத்தப் பொடியுடனுமான
கைப்பழக்கம்..

வெங்காயமும் பூண்டும்
மணத்திடும் விரல்
நகங்கள்..
கண்மூடி அறுத்திட்டாலும்
விரல்கள் காத்திடும்
அருவாள்மனை ஸ்நேகம்..

வழிந்திடும் வியர்வையிலும்
பச்சமிளகாய் மணத்திடும்..
சீரிய சிந்தனை..
நிரம்பிய வயிருகளிலும்
நிறைந்த பாராட்டுகளிலுமே
உண்ட மயக்கம்
காணும் மனம்...

பல நேரங்களில்
அவன் கைதரும்
ஒற்றை காபிகாகவும்
ஒற்றை நெற்றி
முத்தத்திற்காகவும்
ஏங்குவதுண்டு...

நீயாகிய நான்

எனக்கான நிமிடங்களில்
நீ  சாஸ்வாதமாக
உனை ஊற்றிவிட்டாய்..
லயித்த நானும்
உன்னில் ஊரிப்போன
நீயானேன்..
தொலைத்த " நான்"
வலிக்கவில்லை..!!

வரம் கொடுத்த நீயே
இப்போதெல்லாம்
வாய்ப்புக் கொடுக்கவும்
தயங்குகிறாய்..
முடிச்சிட்ட பழைய
நொடிகளை அவிழ்த்து
இன்புறும் கொடிய
என் வியாதிக்கு
மருந்திடவாகிலும்
முயற்சித்துப் பாரேன்..

மலர்ந்தபின்னரும்
மொட்டாகிட்ட பூவாய்..
உணர்ந்த நான்..
மீண்டுமோர் முறை
உன்னால் பூத்து
மணத்துக் கொள்கிறேன்!!!