Saturday 15 December 2018

மகளுக்கு வாழ்த்து

கலர் கலராய் கோலப்பொடி
காயவைத்திருந்த ஒரு
கார்த்திகை முப்பதில்
என் பிரிய ரங்கோலி
வெளிவர யத்தனித்தது...

நான் உயிர்வலி
கொண்ட பொழுதில்
நீயும் ஜனன வலி
கண்டிருப்பாய் தானே
என் தேவதையே?!!!!

மூச்சடக்கி உனை
வெளிதள்ள ஆனமட்டுமான
என் முயற்சிகளில்
நீ பயந்துதான்
போயிருப்பாய்...

வீறிட்ட உன் அழுகை
எங்கள் புன்னகையின்
முகவரியாகியது...
என் ஜென்மபலன்
நிறைவுறச் செய்தது..

மார்கழி ஒன்றில்
ஆன்டாளே  ஜனித்ததாய்
குடும்பமே கூத்தாடியது..
பெண்ணாய் எனை
பூரணமாக்கியது...

வேலில்லை வில்லில்லை
நின்று போராடும்
போர்க்களம் என்று
எதுவுமில்லை..
எனினும்
பெண்ணாய் நீ
சந்திக்க ஆயிரம்
களமுண்டு..
உற்றதுணையாய்
நான் நிற்க..
சாதிக்க பிறந்த நீ
உலகமாள்வாய்!!!
என் பிரிய மகளே!!!




Sunday 11 November 2018

குட்டிக் கதை

இரண்டு நாளாக விடாத மழை..அவள் சாரலடிக்கும் வீட்டு பால்கனியில் நின்றவாறு ரோட்டினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...சற்று மேடாய் இருந்த ரோட்டிலிருந்து மழைநீர் பாய்ந்து வந்தது அச்சத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது. எப்படியும் முழங்கால் அளவு நீர் இருக்கும்.

      வேலைக்குப் போன கணவன் வேறு வீடு திரும்பல .யோசனையாய் இருந்தாள். அலைபேசலாமா வேண்டாமா என்று. கணவருடன் சிறு ஊடல். இரண்டு நாளாய் பேசவில்லை . அவன் வலிய பேசிய தருணங்களிலெல்லாம் முகம் திருப்பிக் கொண்டாள்.

       எதிர்வீட்டு குட்டி பாப்பா ஜன்னல் வழி மழைநீரை கையில் பிடித்து இவள் மேல் வீச ,இவள் பயந்ததாய் பாவனை செய்ய  இன்னும் சிறிது பொழுது கரைந்தது..

                    மழை இன்னும் வலுத்ததாய் தெரிந்தது . வீட்டிற்குள் வந்து கணவனுக்கு
 போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை . ஏதோ வயிற்றை பிசைய மீண்டும் பால்கனி ஓடினாள்.
        
             இருட்ட ஆரம்பித்து விட்டது. தூரமாய் தெரிந்த சற்று அகன்ற உருவம் ரோட்டின்  மேட்டு பகுதியை நோக்கி நகர்வது தெரிந்தது . கணவனின் சட்டை போல் தெரிய   கூர்ந்து பார்த்தாள். அவனே தான். ஆனால் என்ன அது ஒரு வளர்ந்த பையனை தூக்கிச் செல்கிறானே .. யாராக இருக்கும் ..

        கண்களை கசக்கி மீண்டும் பார்க்கிறாள் . அந்த பையன் கையில் குழந்தை போல் தெரிய அவளுக்கு புரிய ஆரம்பித்தது.. அவள் கணவன் தூக்கிச் சென்றது மேட்டுத் தெரு தனபாலையும் அவன் மகளையும் என்று .. தனபால் மூண்றடி உயரமே உள்ள குள்ளமான மனிதன் . அவனைத்தான் தூக்கி செல்கிறான் போலும் . மழைநீர் ஓட்டத்தில் தனபாலால் நடக்கமுடியாமல் போயிருக்கலாம். அதான் தூக்கிச் செல்கிறான் போலும்.

        சிறிது நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க அவள் கீழிறக்கி கதவு திறந்தாள். அவள் கணவன் தான் ..ஆவலாய் ஏதோ சொல்ல வாய் திறந்தவன் அவள் பேச மாட்டாளோ என்ற யோசனையோடு அவள் கையிலிருந்த துண்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

               வேகமாய் அவனைப் பின்தொடர்ந்த அவள் பின்னிருந்து அவனை அணைத்துக் கேவி அழ ஆரம்பித்தாள். பத்து வருடமாய் குழந்தை இல்லையே என்ற அவளுக்குள்ளிருந்த ஏக்கம் ஏனோ உடைந்து பெருக்கெடுக்க... காரணம் புரியாமல் அவன் உறைந்து நின்றான் ..

Saturday 13 October 2018

💑

என்னருகே அவன்
ஓரிரு நிமிடங்களில்
என்னவனாகப் போகும்
அவன்...!!!

மாலையிட்ட கழுத்து
முகம் நிறை புன்னகை
கண்கள் நிறை காதல்
கண்ணோர கள்ளப்பார்வை

வயிற்றில் பட்டாம்பூச்சி
குறுகுறுக்க
காத்திருந்த நிமிடங்கள்
உறைந்து நிற்பதாய்
அதீத பிரமை...

தோள் உரசும்
தருணமெல்லாம் உயிர்
பற்றி எரிய
இவனே அவன்...
"என்னவன்" என
உள்ளம் பிதற்றியது...

முகப்பூச்சுக்கும் மேல்
சிவக்கும் கன்னம்..
தோழியரின் எள்ளலில்
கன்றிபோனது எனலாம்...

நிச்சயித்தநாள் முதல்
காதல் பழக
எத்தனித்த மனம்
இன்று
அவன் வாசத்தில்
சுவாசிக்கிறது...!!

யாரோவாய் இருந்தவன்
இன்று
யாதுமாகி நிற்கிறான்..!!!

காதல் என்னை
தொட்டதாய் உணரவில்லை...
அவனுடனான அன்றைய
பொழுதில் உணர்ந்த
பாதுகாப்பிற்கு நான்
காதல் எனப் பெயரிட்டதில்
பாதகம் வந்துவிடப்
போவதில்லை...!!!

தோள் பிடித்து.. கண் பார்த்து..
கைப்பிடித்து...விதவிதமான
ஒப்பனைகளில்
நிழற்படம் சிறு பேழையில்
சேகரமாக ...இதோ
அவன் என்னுள்
முழுமையாய்
நிறைந்து விட்டான்....

Friday 14 September 2018

மகளுக்காக💗

தூங்கும் மகளை அருகே இழுத்து அணைத்துப் படுத்து முத்தமிடும்
அவன் அடுக்கடி நியாபகபடுத்தித் தொலைக்கிறான் ... அவள் விடுதி செல்லும் தினம் நெருங்குவதை...

இயல்பாய் அவளுக்கு பிடித்தவையாக செய்வதான என் போக்கை அவள் தம்பியும் கண்டும் காணாததாய் கடந்து செல்கிறான்...

விடுதி செல்வதாய் நெஞ்சில் பாரமேற்றி செல்லும் மகளை ஈர விழி நனைக்காத சிறகோடு பறக்கச் செய்திட ஆன மட்டுமாய் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றேன்....

சிறகு விரி மகளே... கொலுசொலி கேட்க பிற்பாடு பார்த்துக் கொள்கிறேன்...❤

Monday 3 September 2018

மகளுக்கோர் கடிதம்✉

என் பிரியமானவளே👱❤

கிழிக்கின்ற தேதித் தாள்கள் என்னை ஏளனம் செய்கின்றன. உன்னோடான நிஜங்களை அது மட்டுமே கொண்டதிருப்பதாய் என்னை கேலி பேசுகின்றன.

              அதற்கெங்கே என் நினைவுச் சேமிப்பின் கொள்ளளவு தெரியப் போகிறது . 

        நீ தூங்கும் வேளையிலெல்லாம் கன்னம் வழித்து முத்தமிட்டு ஆசைப் பெருக்கிக் கொள்கிறேன்.

        உனக்கெனவே தினம் பூக்கும் அந்த ஜாதி மல்லிக்கு உன் இல்லாமையை எப்படி உணர்த்துவேனடா .

       இருப்பின் மகிழ்வை சேமித்து வைத்திட புதிய மனக் கணக்கொன்றை வகுத்துவிட்டேன். வட்டியாய் சில முத்தங்களை அவை குட்டி போட்டால் எப்படி இருக்கும்😍.

        பதியனிடப்பட்ட என் ரோஜா செடியே புதிய மண்ணில் நீ செழிக்கப் போகும் அழகை காண என் கண்ணிரண்டையும் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

      நீ சட்டிப் பானை கொண்டு வா நான் அரிசி காய்கறியும் கொண்டு வருகிறேன் என நீ விளையாடிய விளையாட்டுகளும், கல்லூரியின் விடுதி வாழ்க்கையும் நீ எதிர் கொள்ளப்போகும் திருமண வாழ்க்கையின் ஒத்திகை தானே
என் தங்கமே...

  நீ வாழ்வதை நான் ரசித்திடுவதற்கான கடந்திடும் இந்த நாட்கள் சுமையல்ல பெரும் சுகம்..

            அன்போடு அம்மா..

Thursday 23 August 2018

இதழதிகாரம்😗

கழுத்தும் பேசுமா...
ஆச்சரியந் தெளிந்தேன்
இதழோடு உரையாடியதை
கண்டதிலிருந்து...😍❤

வீடு🏡

வீடு..

வெளிய போயிட்டு ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குள்ள நுழைந்தவுடன் வரும் உணர்வுக்குத தான் நான் நிம்மதினு பெயரிடுவேன் .

           கதவை திறக்கவும் காலையில் சமைத்த வாசனையின் மிச்சம் முகத்திலறைய பெரும் பசி உயிர்க்கொள்ளும்.  தொடரும் பணிகள் மண்டையில் ஓடினாலும் மனம் ஆசுவாசித்துக் கொள்ளும்.

        சமையலறையில் ஊறும் எறும்பும் கூட வந்திட்டியானு கேக்றாப்ல இருக்கும். இதுவே ஊருக்குலாம் போயிட்டு நாள் சென்ற பின்னர் வந்தால் திரைச்சீலைகள் கூட கையசைத்து அழைப்பதாகத் தோன்றும்.

ஓடிப்போய் விரிந்துகிடக்கும் சோஃபாவிற்குள் அடைக்கலமாகிக் கொள்வேன். கதகதப்பான அனைப்பில் அவை ஓராயிரம் கதைகள் சொல்லும் .

       பால்கனி கைப்பிடிகளுக்குக் கூட என்னிடம் சொல்லவென அணிற் கதைகளும் எச்சமிட்டுக் சென்ற காக்கையின் மீதான புகாரும் இருக்கும்.

      நான்கு முறையேனும் வலம் வந்த பிறகுதான் வீட்டினுள் அனைத்தும் சமாதானமானதாகத் தோன்றும் .

வீட்டிற்கான வரைமுறை என்றெல்லாம் என்னிடம் எதுவுமில்லை. ஆனால் என் நிம்மதியின் ஆதாரம் என் வீடன்றி வேறேதுமில்லை

Tuesday 19 June 2018

என் பிரிய பட்டாம்பூச்சியே..

உன் கைச் சிறைக்குள் அகபடாததாய் எக்களித்துக் கொள்ளும் வேளையிலெல்லாம் தளர்ந்தது போல ஒரு பாவனை செய்வாயே... அப்போதெல்லாம் ஓடி அணைத்து உன் மூச்சை முத்தமாக உறிஞ்சிட உதடுகள் தவித்துதான் போகும்..

அழிச்சாட்டியம் பன்னாது உன் அணைப்பில் நுழைவதில் சுவாரஸ்யமிருப்பதில்லை.. அதன்பின்னரான உன் அணைப்பில் சாத்வீகமும் தெரிவதில்லை..

சிந்திய மழைத்துளி யாவும் முத்தாவதில்லையே ... முத்தாகிடாதததால் அவை மதிப்பில்லை என ஆவதுமில்லை..

அள்ளி குடிக்கும் பாவனையில் உன் முகமேந்தி முத்தங்கள் விதைக்கிறேன்.. ஆனால் நானே  அறுவடை ஆகும் அதிசயத்தை நீ நிகழ்த்தி விடுகிறாய்...

இதோ தயாராகி விட்டேன் உன்னோடு ஓர் கண்ணாமூச்சி ஆடிட... விரைந்து வா..சிறகு விரித்து...❤

Tuesday 5 June 2018

ஈரக்காடுகள்.. நனைக்கும் நினைவுகள்....

பிரையண்ட் பூங்கா.... விரித்திருந்த போர்வைக்கு மேலாக லேசாக ஏறிய ஈரம் ஏதோ சிலிர்ப்பை ஏற்படுத்த.. ஆங்காங்கே சிதறியிருந்த செல்ஃபி மோக ஜோடிகளை  ரசிக்க ஆரம்பித்தேன்..

இரண்டாய் பிரிந்து வளர்ந்திருந்த மரத்திடையே நின்றும் சாய்ந்தும் மரத்தை பிளக்கும் தோரணையிலுமான ஃபோட்டக்களை சிரிப்பை அடக்கியவாறு பார்த்துக் கொண்டிருக்க... பூவாளி தூறலாய் வானம் தண்ணீர் இரைக்க ஆரம்பித்தது...

நனைத்தும் நனைக்காமலுமான ஒரு சாரல் மழை..... அதனூடே கால் வலிக்க ஒரு மணி நேர வேடிக்கை பார்த்தவாறே நடை... என்னவோ மனம் தூண் பாறை பார்த்தே ஆக வேண்டுமென உத்தரவிட கார் பயணம் ஆரம்பமானது...

இப்போது மழை வலுக்க ஆரம்பித்திருந்தது... உள்ளங்கை சில்லென சிலிர்க்க... மனம் கோர்த்திட  அவன் விரல் தேடியது...  நனைந்த பைன் மரங்கள் யாவும் தலை குளித்து ... திறந்த மாரோடு நிற்கும் அவனாக தோன்றியதில் ஆச்சரியமில்லாத ஆச்சர்யமாகிப் போனது...

ஈரக்காடுகள்.. நனைக்கும் நினைவுகள்....

தூண் பாறை இரண்டும் கழுவி விட்டாற் போல பளிச்சென தெரிய... பேரிரைச்சலோடு பெருமழை இப்போது வலுத்திருந்தது... போதாதற்கு காற்றும் கைகோர்க்க...  உயிர்வரை சிலிர்த்து சில்லிட்டது...

மீண்டும் மீண்டும் அனத்திக் கொண்டேயிருந்தேன்... இதோ இப்போது இங்கே நான் ...நான்... முழுவதும் நானாக நான்... பிறப்பின் அர்த்தம் நொடியளவேனும் உணர்ந்திருந்தேன்...

காயாதிருக்கட்டும் மகிழ்ந்திருந்த இப்பொன்கனங்கள்...

#பிறந்தநாள்_ஸ்பெசல்

Friday 11 May 2018

மீண்டுமோர் கடிதம்

என் பிரிய பட்டாம்பூச்சியே!!

      இளவேனிற்கால தென்றலொன்றின் மூலமாய் உன் ஜன்னலடைந்த  என் காதல் தூதில்  என்னவெல்லாம் இருந்ததென பிரித்துணர்ந்தாயா?

  மீசை மழித்த வேளைகளிலெல்லாம் முத்தமிட  வசதியாயிருப்பதாய் வழிமொழிந்து வழிந்து வைத்த இவளை காது மடல் கவ்வி காதுக்குள் செல்ல பெயர் உரைத்து மயங்க வைத்ததை நினைவுக் குறிப்பில் வைத்திருக்கிறாய் தானே?

இழுத்துப் பிடித்து துவைத்த போர்வையை நாமிருவருமாய் பிழிந்து கொண்டிருந்த அதிகாலை பொழுதொன்றில் நம் இதழீரமும் சுவைத்ததை கால ஃப்ரீசரில் வைத்திருப்பதை நீ அறிவாய் தானே?

உன் நினைவை ஈன்றும் என் கர்ப்ப நொடிகளுக்கு மட்டும் பிள்ளைப்பேறு நிறைவுறுவதே இல்லை...

மறவாது... நின்
போதை தெளியாது
பேதை இவள்
எதிர்நோக்கும் யாவிலும்
உன் பிம்பம்...

         என் யாதுமானவனே என் வானெங்கும் நீயே நிறைந்து சிறகுவிரி.. உனை என்னிடம் அள்ளிச் சேர்த்திடும் அந்த ஓர் இரவுக்கான நிலவிடம் முன்பதிவு செய்துவிடு...

காத்திருக்கிறாள் இவள்....
                       காதலோடு❤❤

Tuesday 8 May 2018

அதிகாலை நினைவுகள்

அதிகாலை விழிப்புகள்
நிறைய நியாபகங்களை
குத்திக் கிளறுகின்றன
கட்டாத கடனும் ..
கிட்டாத காதலும்..
அதில் முதன்மையாகித்
தொலைவது
சாபமா வரமா எனத்தான்
இன்னும் புரிந்தபாடாய்
இல்லை...

இப்போது என்ன
செய்து கொண்டிருப்பான்
என்னை நினைப்பானா...
புரியாத உருவமென
முறுக்கிய முஷ்டியில்
பச்சைக் குத்தியிருந்த
என் பெயரை
அவனவளிடம் என்னவென்று
சொல்லியிருப்பான்?..

சில வாசனைகள்
அவனுள் நிறைந்த
என்னையும்
என்னுள் நிறைந்த
அவனையும்
எப்போதும் மறந்திடச்
செய்வதேயில்லை..

குடும்ப விழாக்களில்
எதிர்பட்டிடும் வேளையிலெல்லாம்
பூத்திடும் வியர்வையிலும்
எங்கள் காதலின்
மிச்சம் கைக்குட்டைகளில்
ரகசியமாய் பரிமாறப்படுவதுண்டு..

சிற்சில மாதங்கள்
அவனினும் மூப்பாய் பிறந்தது
என் தவறல்லவே
முறையிருந்தும் என்
கனவாக மட்டுமே அவன்
மிஞ்சியிருப்பது இந்த
அதிகாலை தனிமைக்கு
வேண்டுமானால் விருந்தாகலாம்
எனக்கல்லவே!!💔💔

Thursday 5 April 2018

பங்குனி ஈரம்😍

குண்டு உடம்பை சிரமப்பட்டு நகர்த்தி அடிப் பிரதட்சனம் பன்னும் உஷாக்கா..

முதுகில வருசந்தவறாம புள்ளைய தொட்டில் கட்டி அக்னிச் சட்டி எடுக்கும் பூரணியக்கா...

மந்திரம் போல பிராத்தனையை முணுமுணுத்தவாறு கொடிமரத்தில் தண்ணி ஊற்றும் கமலாக்கா..

இந்த அதிகாலைலயே கடைச் சாவிய அம்மா காலடில வச்சித் தாங்கனு சொல்லி கைய மேல தூக்கி பரவசத்தோடு கண் கலங்கும் அண்ணாச்சி..

கோயில் சுவரெங்கும் கணீர் குரல் எதிரொலிக்க பாட்டுப் பாடியபடியே சுத்தி வரும் மகேஸ்வரி பாட்டி..

கல்யாண கனவை கண்ல இருத்தி வச்சு... நீள் கூந்தல முன்னாடி போட்டபடி நெய் விளக்கேத்தும் கயல் பொண்ணு...

அதிகாலை கோயில் நிகழ்வுகளை இப்படி சுவாரஸ்யமாக்கும் இந்த பங்குனிப் பொங்கலை தூணில் சாஞ்சு ஈரமேறும் தரையில் உட்காந்து ரசிச்சு பாக்கைல தோணிச்சு .... தலை மேலிருந்து வழியும்  நீரில் மூக்குத்தி ஜொலிக்கும் மாரியம்மாவும் எவ்ளோ ரசனைக்காரினு..

Thursday 22 March 2018

ஏதோ ஓர் புள்ளியில் கிடைக்கப் போகும் உனக்காகத் தான் எனதிந்த அத்தனை சுழற்சியும்...❤

மனமென்னும் சாத்தான்😈

இடதுகை மேல்நீட்டி
வலதுகையால் கீழ்தாங்கி
அதன்மேல் தலைசாய்ந்து
ஒருபக்கமாய் சாய்ந்து
நீண்ட ஆச்சர்யக்குறியாய்
படுத்திருந்தாள் அவள்!!

நீண்ட தலைமுடி
அசிரத்தையாய் வைத்திருந்த
மல்லிகைப் பூவில்
தேவதையாய் மிளிர்ந்தாள்..
ஆழ்ந்த தூக்கத்திலும்...

நூல்சேலை  சற்றுகசங்கி
இடுப்பில் சற்று நெகிழ்ந்து
இடுப்புப் பிரதேசம்
வெள்ளையாய்...
கண்கள் விலக்க முடியவில்லை
என்னால்...

என் அத்தைமகள்
மூன்று வயது பெரியவள்
மகளைத் தூக்கிக் கொண்டு
திருவிழாவிற்கு வந்திருக்கிறாள்..
வீட்டில் யாருமில்லை
குழந்தையோ தொட்டிலில்..

சாத்தானாகியது மனம்..
நெருங்கி அவளைப் பார்த்தேன்
பெண் வாசனை..
கிறக்கமேற்படுத்த
பாலூட்டும் அவள் தனங்கள்
ஏதோ  செய்தது..

மெதுவாய் அவள் தோள்தொட
குழந்தை வீறிட்டு அழவும்
சரியாக இருந்தது..

விழி திறந்தவள்..
"தூங்கிட்டனடா "னு
வெள்ளந்தியா சிரிச்சவாறே
கேட்டபடி ..
புள்ளய தூக்கினாள்
தொட்டிலிலிருந்து..

நானிருப்பதையும் மறந்து
பட்டென்று ஹூக்கை கழற்றி
குழந்தை வாயில்
திணித்தபின்னரே
நானிருப்பதை உணர்ந்து
சேலைத் தலைப்பாள்
மார் மூடினாள்..

எனக்கிப்போ
அவ வேற மாதிரி தெரிஞ்சா..
அம்மா!!!!!

ரசனைக்காரன்

விலக்கான நாட்களின் அருகாமையின் போதெல்லாம் மஞ்சள் தோய்த்திட்டக் கன்னக் கதுப்பில் இதழுரசி பிரசவித்த பிள்ளை நறுமணம் கொண்டிருப்பதாய் கொண்டாடுகிறான் .....

#ரசனைக்காரன்❤

Saturday 17 March 2018

பிரியங்கள்❤

திகட்டாத என் தமிழ் ..
மடித்து சொருகும் கொசுவம்.. பறவையின் சிறகசைவு..
தட்டானின் சிறகொலி..
அண்றிலின் வேகம்..
கொடி கயிற்றில் மழைத்துளி.. அதிகாலை பயணம்..
பனிக்கால குளிர் நீர் குளியல்..
பங்குனி காலை மாரியம்மன்..
அக்னி சட்டி கங்கின் வாசம்..
கடைசி மாடிப்படியோடான டீ..
அப்பாவின் சட்டை..
எப்போதும் ஜிமிக்கி..
இந்த வரிசையில் இப்போது 
உன் ஸ்கூட்டர் ஒலி!!!!

Saturday 27 January 2018

💔

ஒடித்த கரும்பின் சாறு வடிந்து உலர்ந்திட்ட பின்னரான பிசுபிசுப்பாக.. என் இரு கன்னக்கதுப்புடளிலும் உன் முத்தம் மிச்சமிருக்கிறது...

 இடறி இடித்து பெயர்ந்த பெருவிரல் நகக்கண்ணில் நீ போட்டுவிட்ட நகப்பூச்சும் விடாது பற்றிக் கொண்டிருக்கிறது...

 பேரன்பின் பெருக்கில் உனை அணைத்து வெறி கொண்டு கடித்த உன் சருமத் துணுக்குகளும் பல்லிடுக்கிலிருந்து வெளிவர விரும்பவில்லை ...

கசப்பும் துவர்ப்பும் புளிப்புமான மிச்ச நினைவுகளை நிறைத்திருக்கிறாய்... சுவை மாறாது வைத்திருக்கிறேன் திருப்பி அளித்திட..

முத்தங்களின் போதெல்லாம் ப்ரத்யேக வாசனையோடு நாசிகளை நிரைத்திட்ட உன் சுவாச ஓட்டங்களை... என் நுரையீரலில் நரப்பி வைத்திருக்கிறேன்...

 முறிவிற்குப் பின்னரும் நீயே என் நானாக இருக்கிறாய்.. வாயேன் ஒரு தேநீரில் மீண்டும் இணைந்துப் பார்க்கலாம்...❤

Thursday 25 January 2018

தேவைக்கு சுழன்றிய பின்னரான
பாதம் ஓய்ந்த நிலையில்
நான் தஞ்சமடைய நீ வேண்டும்...

இருகால் நீட்டிய உன்
சுவர் சாய்ந்த இருப்புகளின்
போதெல்லாம் உன்
காலிடையே குட்டித்
தூக்கமேனும் வேண்டும்...

ஓய்ந்த வாக்குவாதங்களின்
சுவடின்றி உன் நெஞ்சப்
பஞ்சனை ஏந்தல் வேண்டும்...

படபடத்த நிலைகளிலெல்லாம்
ஆசுவாசிக்க உன்
இருகை கதகதப்பு வேண்டும்...

அம்முவென்றும் தங்கமென்றும்
கொஞ்சி கெஞ்சிடவேனும்
வாரமிரு உன் ஊடல் வேண்டும்...

உன் மூக்கிற்கு கீழான
அந்த
முறுக்கிய மயிர்கற்றையின்
மீதான காதலுக்காகவேனும்
நீ எப்போதும் வேண்டும்...❤❤

பிரிவு😔

எங்கோ ஒலித்திடும்
ஒலிப்பெருக்கியில் உன்
பிடித்தபாடல் கேட்கிறது..

கடந்திடும் முகங்களில்
உன் சாயல் ஒட்டிக் கிடக்கிறது..

ஏதேச்சையான சிலரது
சந்திப்புகளில்
உன் நினைவுகளின்
மிச்சம் புன்னகைக்கிறது...

சில உரையாடல்களில்
உன் பிரத்யேக
சொற்கள் தாவிக்குதிக்கிறது...

இமைக்கின்ற
கால இடைவெளிகளில் கூட
உன் பிம்பம்
மறைந்து தொலைவதில்லை...

சாத்தியமில்லாத
இந்த பிரிதலை
நிகழ்த்திவிட
கூடுதலான
உன் நினைவுப்பலமே
தேவையாகவும் இருக்கிறது....

தேநீர்

இருவிரல் பிடியில்
பெருவிரல் அணைப்பில்
இளஞ்சூடு உணர்ந்திட்ட
உள்ளங்கைகள்

நின்றாடும் ஆவியின்
மென் பரவலில்
நாசியடையும்
ஏல தேயிலையின்
நறுமணம்

தேநீர் பிரியம்😍

காதல் பஞ்சாரம்💘

 "இப்ப வரியா இல்லையா".. கேள்வியோடு நின்ற என்னை மொபைலில் இருந்து தலை தூக்காது விழிகளை மட்டும் உயர்த்தி அசுவாரஸ்யமாய் பார்த்தவனை வெறித்துப் பார்க்க எங்கோ.."விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்.." னு பாடல் கேட்க ஏனோ சூழலுக்கு பொருத்தமாய் தோன்ற வெறித்த விழி சிரித்துத் தொலைந்தது..

               அசுவாரஸ்யமும் சுவாரஸ்யமாகிப் போக.. அவன் கைப்பற்றி அக்குள் குள் இறுக்கி பிடித்தபடியே வீடு பூட்டி ... இழுத்துச் சென்று பைக் அருகே நிறுத்தினேன்.. சாவியை தூக்கி போட்டு வானம் பாத்து சீட்டி அடித்த அவன்  உதடுகள் கோபம் உறிஞ்சி தொலைக்க ..நானே வண்டியை ஸ்டார்ட் செய்தேன் .. பின்னாடி உட்கார்ந்து உஷ்ண மூச்சால் கழுத்தில் கோலமிட்டு வேடிக்கை பார்த்தவாறு மட்டுமே வந்தான்..

இதோ கண்ணுக்கு மை போட்டுக் கொண்டே அவனை கண்ணாடி வழி ரசித்திருக்கும் இந்த வேளையில் கூட ஓரப் பார்வை வீசியதை நானறிந்திட கூடாதென.. மெல்ல முணுமுணுக்கிறான்  "விழியில் உன் வந்து விழுந்தேன் அந்த நொடியில்..."

                     பின்னொரு முறைக்கான கவிதைத் தருணங்கள் தரும் என்
 மன பஞ்சாரம் அவன்!

காதல் கிறுக்கி

பின்னிருந்து கட்டித் தழுவிடும் போதெல்லாம்  என்னை உப்பு மூட்டைத் தூக்கிடும்  போதுமான வலு கொண்டிருக்கிறாய்..

         தாவிக் கடித்திட விழையும் போதெல்லாம் எளிதில் அகப்பட்டுக்  கொள்ளும் வித்தைக் கற்றிருக்கிறாய்.. 

           எட்டிக் கொடுத்திடும் முத்தம் ஒவ்வொன்றையும் சாதம் விரும்பிடும் குழந்தையாய் வாகாய் வாங்கிடும் காதல் பயின்றிருக்கிறாய்..

        இடைத் தெரிந்திடும் சேலைக் கட்டின் போதெல்லாம் குறிப்பறிந்து பணி செய்கிறாய் ...

        மூச்சின் ஏற்ற இறங்களிலெல்லாம் தாலாட்டிடும் மெத்தைத் தருகிறாய்.. இதைவிட வேறென்ன வேண்டிடப் போகிறதாம் இவள் காதல் போதை தெளியாதிருந்திட❤❤❤