Saturday 3 June 2017

நிகழ்வின் பிரதி

குனிந்திருக்கும் தலை.. கண்கள் மூக்கு உதடு எங்கும் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது.. உதடு தொட்ட அவை கரிக்கையில் தான் கண்ணீரும் கலந்து வருவதை நான் உணர்ந்தேன்..

        ஏனென்று புரியாத நிலையில் நான் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நொடியை பதிவு செய்திடல் எனக்கு அவசியமாய் தெரிகிறது.. நினைவு கயிறு அறுந்திட்ட காலநிலையில் முன்னொருமுறை நான் கடந்திருக்கிறேன் இதைப் போன்றோர் நிகழ்வில்.. மீண்டும் இன்று .... இதோ இந்த நிலையில்..

       பூவை அகற்றக் கூடாதாம்... நான் தலை மயிர் தளர்த்தி... மனம் ஏனோ இறுக அமர்ந்தேன்.. விழி திறக்கப் பிரியப் படாது.. இறுக மூடி.. தலை கவிழ்ந்தேன்... அவர் தலை மயிரை ஈரமாக்கி  .. சவரக் கத்தியின் பிளேடை மாற்றிய நொடிகள்.. யுகமாய்க் கழிந்தன.. நினைவுகளை குவித்துப் பார்க்க முயல.. சூனியமாய் தோண்றவே.. உதடு பிரியாது முனுமுனுத்தேன் ஓம்சக்தியென மீண்டும் மீண்டும்..

        சாக்லேட்டிலிருந்து கவரை பிரிப்பது போல.. பாலிலிருந்து ஆடையை எடுப்பது போல்.. வலியாது பிரியும் ஆன்மாவைப் போல்... என் தலைமயிரை லாவகமாக அவர் எடுத்துப் போட.. தலையெங்கும் ஓர் சில்லிட்ட உணர்வு... முடித்ததாய் அவர் அறிவிக்க கண் திறந்தேன்... தலைகணம் இறங்கியது.. லேசாக உணர்ந்தேன்....

           மகன் மகள் அவர் என எல்லோரும் உதட்டில் சிரிப்பை ஒட்டி வைத்து கலங்கிய கண்ணை மறைக்க ஒத்திகை பார்த்தனர்...

       நான் எதையுமே காணாதவளாய் புன்னகையை வீசிய பாவனையில்  குளியலறை நுழைந்தேன்...