Friday 11 May 2018

மீண்டுமோர் கடிதம்

என் பிரிய பட்டாம்பூச்சியே!!

      இளவேனிற்கால தென்றலொன்றின் மூலமாய் உன் ஜன்னலடைந்த  என் காதல் தூதில்  என்னவெல்லாம் இருந்ததென பிரித்துணர்ந்தாயா?

  மீசை மழித்த வேளைகளிலெல்லாம் முத்தமிட  வசதியாயிருப்பதாய் வழிமொழிந்து வழிந்து வைத்த இவளை காது மடல் கவ்வி காதுக்குள் செல்ல பெயர் உரைத்து மயங்க வைத்ததை நினைவுக் குறிப்பில் வைத்திருக்கிறாய் தானே?

இழுத்துப் பிடித்து துவைத்த போர்வையை நாமிருவருமாய் பிழிந்து கொண்டிருந்த அதிகாலை பொழுதொன்றில் நம் இதழீரமும் சுவைத்ததை கால ஃப்ரீசரில் வைத்திருப்பதை நீ அறிவாய் தானே?

உன் நினைவை ஈன்றும் என் கர்ப்ப நொடிகளுக்கு மட்டும் பிள்ளைப்பேறு நிறைவுறுவதே இல்லை...

மறவாது... நின்
போதை தெளியாது
பேதை இவள்
எதிர்நோக்கும் யாவிலும்
உன் பிம்பம்...

         என் யாதுமானவனே என் வானெங்கும் நீயே நிறைந்து சிறகுவிரி.. உனை என்னிடம் அள்ளிச் சேர்த்திடும் அந்த ஓர் இரவுக்கான நிலவிடம் முன்பதிவு செய்துவிடு...

காத்திருக்கிறாள் இவள்....
                       காதலோடு❤❤

Tuesday 8 May 2018

அதிகாலை நினைவுகள்

அதிகாலை விழிப்புகள்
நிறைய நியாபகங்களை
குத்திக் கிளறுகின்றன
கட்டாத கடனும் ..
கிட்டாத காதலும்..
அதில் முதன்மையாகித்
தொலைவது
சாபமா வரமா எனத்தான்
இன்னும் புரிந்தபாடாய்
இல்லை...

இப்போது என்ன
செய்து கொண்டிருப்பான்
என்னை நினைப்பானா...
புரியாத உருவமென
முறுக்கிய முஷ்டியில்
பச்சைக் குத்தியிருந்த
என் பெயரை
அவனவளிடம் என்னவென்று
சொல்லியிருப்பான்?..

சில வாசனைகள்
அவனுள் நிறைந்த
என்னையும்
என்னுள் நிறைந்த
அவனையும்
எப்போதும் மறந்திடச்
செய்வதேயில்லை..

குடும்ப விழாக்களில்
எதிர்பட்டிடும் வேளையிலெல்லாம்
பூத்திடும் வியர்வையிலும்
எங்கள் காதலின்
மிச்சம் கைக்குட்டைகளில்
ரகசியமாய் பரிமாறப்படுவதுண்டு..

சிற்சில மாதங்கள்
அவனினும் மூப்பாய் பிறந்தது
என் தவறல்லவே
முறையிருந்தும் என்
கனவாக மட்டுமே அவன்
மிஞ்சியிருப்பது இந்த
அதிகாலை தனிமைக்கு
வேண்டுமானால் விருந்தாகலாம்
எனக்கல்லவே!!💔💔