Monday 6 November 2017

வாழப் போகிறான் அவன்!!

ஏனென்று கேட்க
ஆளில்லாத மதர்ப்பு...
பெண்மை ஒன்றின்
நிராகரிப்பிலும் ..
செழித்திருந்த தன்திமிரிலும்..
கழிந்த பொழுதுகள்
வரமாய் தோன்றியது..

காலச்சூழல் மாற
குடுமபஸ்தர்களெல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய்
தோன்றவே.. நிகழும் யாவும்
நகராததாய் தோன்றியது..
சுழியாய் நிற்கும் நிஜம்
இரவுகளை நகராது
தடுத்து நிறுத்துவதாய்
பயமுறுத்தியது...

தேடலின் முடிவில்
கிடைத்தாள் அவள்!!!
கண்டேன் என் சீதையை என
உள்ளம் கொண்டாடியது..
சவமாய் கழித்த நாட்கள்போய்
இன்று சிவமாய் நான்!!!
என்னில் சரிபாதி கலக்க
காத்திருக்கும் சக்தியாய் அவள்!!

ஏனென்று கேட்க அவளிருக்க
நானும் குடும்பஸ்தனானேன்
பிடித்ததுக்கும் பிடிக்காததற்கும்
அவளே அகராதி ஆனாள்!!
என் பெயர் நேரெழுதிய
அவள் பெயர்காண
செலவிட்ட ஆயுள்பாதியை
சேர்த்தே வாழ இதோ
புறப்பட்டுவிட்டேன்!!!!

Wednesday 1 November 2017

அவனுக்காக

இனிய மாசிலன்..

              சுவைக்கும் தமிழில் கவிதை சொல்லச் செய்கிறாய்.. . காலை காபி வேளையிலும்... நான் பூ தொடுக்கும் நேரங்களிலும்... கூந்தல் காய்ந்திட என் வெயில் ஸ்நேக பொழுதுகளிலும்.. வெட்கம் கொண்டு இரவு எட்டிப் பார்க்கும் நம் தனிமையிலும்...கவிதை சொல்லச் செய்கிறாய்.... அப்படி என்ன மயக்கமோ.. என் வரிகளில்...

                நான் சொல்லிடும் வார்த்தைகளை மென்றிடாமல் விழுங்கிடும் வித்தைக்காரன் நீ... பின்னொரு சந்தர்ப்பங்களில் சேதப்படுத்தாத வரிகளோடு மேற்கோள் காட்டி என்னைச் சொக்க வைத்துவிடுகிறாய்....

                சொக்கிய அந்த பொழுதுகளில் எல்லாம்.. என் தாடை ஏந்தி மூக்கு
நுனி கடித்து...  என் வெட்கம் திண்கிறாய்..  என் மீது விட என் மூக்குத்தி மீதான உன் காதல் அளப்பரியது...

       எண்ணெய்தேய்த்து குளித்திட்ட நாளிலெல்லாம்..கழற்றி வைத்திட்ட மூக்குத்தியை.... பிடிவாதம் பிடித்து அணிவித்திட நீ செய்திடும் கபட நாடகங்கள் காதல் கிறுக்குத்தனங்கள்... நீ மாட்டி விட வேண்டியே வாரம் மூன்று முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறேன்..

              இதோ நீ வாங்கித்தந்த புதிய மூக்கு வளையத்தை பார்த்துக் கொண்டேதான் இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்... விரைந்து வாடா .... 

                எனக்கு மூக்கு வளையம் மாட்டத் தெரியாது.. நீ மாட்டி விடும் வேளையில் சொல்வதற்கென்று கவிதை யோசிக்க ஆரம்பித்து விட்டேன்...

                                               காதலோடு இவள்❤
                      

Sunday 24 September 2017

கொலு பொம்மையாகிய நான்!!

தோரண விளக்குகள்
கண்கூசச் செய்திட..
பஞ்சாயத்து நடந்திட்ட
ஆலமரம் அருகே
கூடி நின்ற பெரியோரையும்..
வேடிக்கை பார்த்திட்ட
ஊராரையும் சிரித்தபடியே
நான் கடக்க..

அருகே இந்திரலோகத்தில்
இந்திர சபையில்
ரம்பை ஊர்வசியின்
நடனம் அரங்கேறிக்
கொண்டிருந்தது..

அதன் எதிரே
ஊதாநிற ஆடையுடன்
இந்திய கிரிக்கெட்அணியும்
கண் கவர்ந்தது..

திடீர் திருப்பமாக
கல்யாண வீடொன்றின்
திருப்பூட்டு நிகழ்ச்சியும்
உள்ளம் நெகிழச்
செய்தது..

கண்மூடித் திரும்பிய
பொழுதில்..
அருகே உழவு வேலையோடு
விவசாய நிலமொன்று
பசுமை பொங்கிட
களைகட்டியது..

கயிற்றுக்கு அந்தப் பக்கம்
எட்டிப் பார்க்க
அகத்திய முனியோடு
முனிவர் கூட்டம்
தவக் கோலம்
கொண்டிருந்ததனர்..

மேல் வரிசையெல்லாம்
கடவுளரும்..
கீழ் வரிசையில்
வாத்தியக்காரர்களுமாய்..
அலங்கார நிலையில்
அழகிய மாதர்களுமாய்
கொலுப் படிகள்
கருத்தைக் கவர்ந்திட..

கருநிற தேகமோடு
கச்சையணிந்த
பெண்ணொருத்தி
கால் மேல் கால் போட்டு
சற்றே அதிக திமிர் கொண்ட
விழியோடு .
தலை சாய்த்து
வில்புருவம் உயர்த்தி..
குறியீடாய் ஏதோசொல்ல
நானும் ஒருமுறை
தலைசாய்த்து எனைப்
பார்த்துக் கொண்டேன்
எதிரே கண்ணாடியில்
தெரிந்த என்
நிழல் உருவத்தை!!!!

Thursday 21 September 2017

Letter to my buddy

அன்பிற்குரிய மாசிலன்...

நீ அதிகம் பேசாத நாட்களில் என் கற்பனை களம் காண்கிறது.. இன்னென்று அறியாத உணர்வுகளின் கூட்டணியில் பிரித்து பிரித்து புதிது புதிதாய் பொருள் காண்கிறேன் உன் அசைவுகளில்..  பொத்தி வைத்த  மிச்ச நினைவுகளை கலைத்துப் போட்டு புது அதிகாரம் தேடிப் பார்க்கிறேன்..

         சிதறாத வார்த்தைகளுக்கு கண்களே அதிகம் ஏக்கம் கொள்கிறது... உன் இதழோசையை இந்த செவி என்று பிரித்து பொருள் உணர்ந்தது... கண்கள் தானே உன் நவரசங்களையும்.. அள்ளிப் பருகியது..

    இங்கு உன் மௌனங்களின் பேரிரைச்சல் டெசிபல்.. கண்களுக்குத் தான் வலி தருகிறது.. இருப்பினும் மொழிந்துவிடாதே.. சற்றே என்னைக் காய்ந்து போகச்செய்.. செவியுணரா தருணங்களில்.. இதயம் உன்னை அதிகம் அறிவதாய் உணர்கிறேன்..

         விதவிதமாய் காதல் கற்கிறேன்.. இன்று இதோ உன் மௌனத்தில்...

                                                      காதலுடன்
                                                                  இவள்.....

Monday 18 September 2017

மறந்துபோனதே!!

காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே..

இரு போர்வை மூடியும்
தாளாத குளிர்...
மூக்கும் தன் பணி மறந்திட்டது
போன்ற சுவாசம்..
சுவாசம் அடைத்திட்டநாசியையும்
ஏமாற்றி ஒழுகிடும்மூக்கு..

அடித்த அலாரம் தாண்டி
தூங்கவிடாத கடமை
கை கால்களில்
செயற்கை புத்துணர்ச்சி தந்தது..

பருப்பு சோறும்
வெண்டைக்காய் கூட்டும்
கோவக்காய்பொரியலும்
டப்பாவை நிரப்ப..
காலை தோசை
தேங்காய்சட்னியுடன்
இணைந்தது...

ஆமாம்..
காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே...

ஒழுகிடும் மூக்கை
துடைத்திட பழைய
துணி கிழித்தெடுத்துக் கொண்டு
பணிக்கும் கிளம்பியாச்சு..
எரியும் கண்களும்
நடுங்கிடும் தேகமுமாய்
காய்ச்சல் கடமையாற்ற..
என் கடமை இயற்ற
இயலாது போனது...

ஆமாம்..
காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே...

ஒத்தையாய் போய்
ஊசிபோட்டு வீடு திரும்ப..
சாரலோடு மழை
வரவும் சரியாக இருந்தது..
காய்ந்திட்ட துணிகளை
அள்ளிப் போட்டு
பாதி நனைந்துபோன
நிலையில் சோஃபா வில் சாய
காய்ச்சல் நியாபகம் வந்தது..
இறுகும் தொண்டைக்கு
இதமாய் காபிகலக்கித்தரும்
கைக்காக ஏங்கியவாறு..
அடுப்படி நுழைந்தேன்..

ஆமாம்..
காய்ச்சல் வந்தால்
எப்படி நடந்து கொள்வேன்
மறந்து போயிற்றே...

Tuesday 12 September 2017

முத்தம்

கை மடித்து கன்னம் தாங்கிய நிலைகளில் கைகளும்...

வெகு சில நேரங்களில்
அருவாள்மனை
உரையாடலின் போது விரல்களும்..

சிரித்திடும் போதெல்லாம்
கண்களும்..

காலை அரைத்தூக்க வேளையில் கன்னக் கதுப்புகளும்..

எனை மறந்த நிலையிலான ரசிப்புகளில் கழுத்திடையும்..

என் பின்னரான நம் பைக் பயணங்களில் காதுகளும்..

உன் முத்தம் பெறும் பாக்கியம் பெறுகின்றன....

ஏக்கம்

அடுப்படி ஒழித்து
காலைக்கான
தயாரிப்புகளுக்கான
முன்னேற்பாடுகள்...

இடைவேளையற்ற
அவசரகதி நடையோட்டம்..
உப்பும் மஞ்சளும்
வத்தப் பொடியுடனுமான
கைப்பழக்கம்..

வெங்காயமும் பூண்டும்
மணத்திடும் விரல்
நகங்கள்..
கண்மூடி அறுத்திட்டாலும்
விரல்கள் காத்திடும்
அருவாள்மனை ஸ்நேகம்..

வழிந்திடும் வியர்வையிலும்
பச்சமிளகாய் மணத்திடும்..
சீரிய சிந்தனை..
நிரம்பிய வயிருகளிலும்
நிறைந்த பாராட்டுகளிலுமே
உண்ட மயக்கம்
காணும் மனம்...

பல நேரங்களில்
அவன் கைதரும்
ஒற்றை காபிகாகவும்
ஒற்றை நெற்றி
முத்தத்திற்காகவும்
ஏங்குவதுண்டு...

நீயாகிய நான்

எனக்கான நிமிடங்களில்
நீ  சாஸ்வாதமாக
உனை ஊற்றிவிட்டாய்..
லயித்த நானும்
உன்னில் ஊரிப்போன
நீயானேன்..
தொலைத்த " நான்"
வலிக்கவில்லை..!!

வரம் கொடுத்த நீயே
இப்போதெல்லாம்
வாய்ப்புக் கொடுக்கவும்
தயங்குகிறாய்..
முடிச்சிட்ட பழைய
நொடிகளை அவிழ்த்து
இன்புறும் கொடிய
என் வியாதிக்கு
மருந்திடவாகிலும்
முயற்சித்துப் பாரேன்..

மலர்ந்தபின்னரும்
மொட்டாகிட்ட பூவாய்..
உணர்ந்த நான்..
மீண்டுமோர் முறை
உன்னால் பூத்து
மணத்துக் கொள்கிறேன்!!!



Saturday 3 June 2017

நிகழ்வின் பிரதி

குனிந்திருக்கும் தலை.. கண்கள் மூக்கு உதடு எங்கும் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது.. உதடு தொட்ட அவை கரிக்கையில் தான் கண்ணீரும் கலந்து வருவதை நான் உணர்ந்தேன்..

        ஏனென்று புரியாத நிலையில் நான் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நொடியை பதிவு செய்திடல் எனக்கு அவசியமாய் தெரிகிறது.. நினைவு கயிறு அறுந்திட்ட காலநிலையில் முன்னொருமுறை நான் கடந்திருக்கிறேன் இதைப் போன்றோர் நிகழ்வில்.. மீண்டும் இன்று .... இதோ இந்த நிலையில்..

       பூவை அகற்றக் கூடாதாம்... நான் தலை மயிர் தளர்த்தி... மனம் ஏனோ இறுக அமர்ந்தேன்.. விழி திறக்கப் பிரியப் படாது.. இறுக மூடி.. தலை கவிழ்ந்தேன்... அவர் தலை மயிரை ஈரமாக்கி  .. சவரக் கத்தியின் பிளேடை மாற்றிய நொடிகள்.. யுகமாய்க் கழிந்தன.. நினைவுகளை குவித்துப் பார்க்க முயல.. சூனியமாய் தோண்றவே.. உதடு பிரியாது முனுமுனுத்தேன் ஓம்சக்தியென மீண்டும் மீண்டும்..

        சாக்லேட்டிலிருந்து கவரை பிரிப்பது போல.. பாலிலிருந்து ஆடையை எடுப்பது போல்.. வலியாது பிரியும் ஆன்மாவைப் போல்... என் தலைமயிரை லாவகமாக அவர் எடுத்துப் போட.. தலையெங்கும் ஓர் சில்லிட்ட உணர்வு... முடித்ததாய் அவர் அறிவிக்க கண் திறந்தேன்... தலைகணம் இறங்கியது.. லேசாக உணர்ந்தேன்....

           மகன் மகள் அவர் என எல்லோரும் உதட்டில் சிரிப்பை ஒட்டி வைத்து கலங்கிய கண்ணை மறைக்க ஒத்திகை பார்த்தனர்...

       நான் எதையுமே காணாதவளாய் புன்னகையை வீசிய பாவனையில்  குளியலறை நுழைந்தேன்...

Monday 22 May 2017

என் லட்டு குட்டி

வாய்ப்பிளக்க ராஜராஜனின்
பிரம்மாண்டம் ரசித்து
உள்ளும் வெளியுமான
ஆச்சரியங்களில் லயித்து
சோழர் பாண்டியர்
நாயக்கர் மராட்டியர்
என கோயிலின்
பரிணாமங்களை ஆராய்ந்து..

கலைந்து கிடைத்த
அத்துணை ஓவியங்களிலும்
மாயக் காதலன்_
வந்தியத் தேவனையும்
சுந்தரன் அழகன்_
அருள்மொழிவர்மனையும்
கயல்விழியாள் _
எம் பொறாமைக்கு உரியவளான
குந்தவை நாச்சியாரையும்..
கண்கள்இடுக
தேடிய பொழுதில்..

கோர்த்த விரல்களுக்குள்
எளிதாய் விரல் சொருகி
கவனம் ஈர்க்கும் சாகசங்கள்
அத்துணையும் புரிந்து..
முடியாது போன ஓர் நிலையில்
அபிநயம் பிடித்து..
கண்சிமிட்டி தானாக
விளையாடிய
தங்கை மகள்..
அத்துணையையும்
பின்னுக்குத்தள்ளி
பிரம்மாண்டமானாள்
எங்கள் முன்னே...!!!!!!

குட்டி கதை

நான் கௌதம்..சென்னைல வேலை..கம்ப்யூட்டர் இன்ஜினியர்...இதோ லீவ் ல சொந்த ஊரு கோயமுத்தூருக்கு வந்திருக்கேன்...ஒரு முக்கியமான வேலையை இம்முறை முடித்தே சென்னை திரும்ப வேண்டும்னு முடிவெடுத்திருக்கேன்

     என் நிறைவேறாத காதலின் ஓர் அடையாளம் நெஞ்சில் டாட்டூவாய் உறுத்திக் கொண்டே இருந்தது..அதை ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டிடம்  காட்டி அழித்துவிட முடிவெடுத்தேன்..

    ஊரின் பிரபல மருத்துவமனையின் டாக்டரிடம் டோக்கன் போட்டுவிட்டு காத்திருந்தேன் ...அப்பதான் அவங்களைப் பார்த்தேன்...

அம்மாவும் பொண்ணும்... நடுத்தர குடும்பமாய் இருக்க வேண்டும்...இருவருமே ஹோம்லி அழகு..பெண்ணிற்கு 17_18 வயதிருக்கலாம்..அம்மா பின் முப்பதுகளில் இருந்தார்..காத்திருந்த அனைவருமே  மொபைல் நோண்டிக் கொண்டிருக்க.. இருவர் மட்டும் சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டே இருந்தனர்...

        எனக்கு ரொம்ப ஆச்சர்யம் ..அப்படி அம்மாவும் பொண்ணும் என்னதான் பேசுவாங்கன்னு...காத்திருந்து பொறுமை அற்ற நிலையில் மகள் எழுந்து ரிசப்சனிடம் விசாரிக்க...அடுத்ததாய் அவர் தான் என அவள் என்னை சுட்டி காட்டினாள்..
   
        அவள் ஸ்நேகமாய் சிரித்துவிட்டு அவள் முறை எத்தனாவதென விசாரித்துக் கொண்டிருந்தாள்..அழகிய முகம்.. ப்யூட்டிபார்லர் காணாத புருவங்கள்.. எலுமிச்சை நிறம்..... இயல்பிலேயே சிவந்த உதடுகள்...யாருடனும் ஸ்நேகமாகும் பாவம்..நீளமான கூந்தல்..நேர்த்தியான சுடிதார்..மொத்தத்தில் அம்சமாய் இருந்தாள்..

                எனைமறந்து நான் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு பெண் குழந்தையை இடுப்பில் வைத்தவாறு அவளை கடக்க அந்த குட்டி இவள் ஷாலை பிடிவாதமாய் பற்றிக் கொண்டு இழுக்க..முகம் கொள்ளா சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொஞ்சி பின் அதன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு நானிருக்கும் திசை பார்த்து சிரித்தாள்..

     ஒருகனம் இதயம் நின்று துடித்தது..அனிச்சையாய் என் தலை பின் திரும்ப என்னருகே அவள் அம்மா..அவ அவங்கம்மாவ பாத்து சிரிச்ருக்கா...இது புரியாத நான் வழிந்து வைக்க...அவள் இதழோர இளநகையுடன் ஒரு ஓரப் பார்வை பார்த்து அவள் அம்மா அருகே வந்து உட்காரவும் என் டோக்கன் நம்பர் அழைக்கவும் சரியாக இருந்தது...

           அவள் எனக்கு ஏதோ உணர்தினாள்.. என் பழைய காதலை டாட்டூவிலிருந்து மட்டுமல்ல என் மனதிலிருந்தும்  அழிக்க  என்னால் முடியும்னு அவளை நான் ரசிச்ச கனத்தில் உணர்ந்தேன்..

             டாக்டர பாத்திட்டு வெளில வந்தப்போ அவ அங்க இல்லை..பாத்தே ஆகனும்னு தோனல...ஆனா ஏதோ நிறைவா இருந்திச்சு .....

நீ மட்டும் போதும்

எனைத் தாண்டி எதையோ பார்க்கிறான் .. எனை என்றெண்ணி தலையசைக்க வாங்கிய மொக்கையும் கவிதையாகிறது..

     காலை நடைபயிற்சி பொழுதுகளில் கைபிடிக்கவேனும் பள்ளம் சறுகி காயம் வாங்குகிறேன்..

     சுற்றிவைக்கவென வாங்கிய சூடம் உன் வாய்ப் பார்த்தே கரைந்து போகிறது..என் கவலைகள் போல..

        நீ அறியாது உன்னை ரசிப்பது எனக்கான நீ தரும் வரம்... வரம் தந்த என்சாமி... உன் காலடி சொர்க்கமன்றி வேறெதுவும் அருளிவிடாதே...

       பிழைத்துபோகிறேன் உன் மூச்சின் மிச்சக் காற்றில் ... பூரணமாக்கிவிடு ... உன் அடர் புன்னகையால்... பிறவியில் நீ போதும்... நீ மட்டும் போதும்...❤❤
        

           

Sunday 16 April 2017

முதல் முத்தம்

ஆளில்லா வீட்டில்
ஜன்னலை மூடி
பகலையும் இரவாக்கிய
ஓர் நாளில்
குறுகுறுத்த பதின்மவயது
வீட்டுச் சுவரோர
மூலைகள் வெட்கம் கொள்ள
அணைத்தபடியே சுவரளந்து
உருண்டு விழுந்த பொருட்கள்
யாவும் கண்மூடிக்கொள்ள
அவசர தேடலில்
நீ தந்த முதல் காயம்
முதல் முத்தமென
நியாபகக்குறிப்பில்
நிலைபெற்றது❤❤❤❤

Thursday 5 January 2017

முதல் காதலின் வலி!!!

தாக்கியதென்னவோ முதுகைத்தான்
கோபமாய் பந்தை கையிலேந்தி
திரும்புகையில் நின்றவன் அவனே..
என் ஒரு வருடத்திய
மானசீகக் காதலன் ..
இதயம் தந்தி அடிக்க
கண்கள் கடிதமிட தயாரானது..

அழுத்திபிடித்த தோழியின் விரல்
என் இருப்பு, கல்லூரி என
பொட்டிலடிக்க.. வழிந்துகொண்டே
பந்தை அவனிடம் கொடுத்தேன்..
சாரி சொல்லி அவன் நகர
தாறுமாறாய் துடித்த இதயம்
என்னை மாயலோகம்
 அழைத்துப் போனது
ஆம்.. நான் மயங்கிப் போனேன்!!!..

விழித்துப் பார்க்க, நான் கிடத்தபட்டிருந்ததென்னவோ
கல்லூரியின் முதலுதவி அறையில்..
சிலபல சமாதானங்கள் தீர்ந்த
நிலையில் ..அன்றிலிருந்து
நானும் அவனும் நண்பர்களானோம்..

நட்பாவது மிஞ்சட்டுமென
காதலுக்கு கல்லறைக்கட்டினேன்...
தோளுரச ,விரல்பிடிக்க,
தலைகொட்ட ,பின்னமர்த்தி
வண்டியோட்டவென அவனின்
இயல்புகள் என்னை
இயல்பில்லாமலாக்கின..

வருடங்கள் பலதொலைய
நட்பும் அவரவர் திருமணங்களில்
மீளா தூக்கத்திற்கு போயிற்று..

என் மகளுடனான ஓர் நாள்
ஷாப்பிங்கில் கிட்டியது, அவனுடனான
அந்த அதிசய எதிரபாரா ஓர் சந்திப்பு..
நல விசாரிப்பிற்குப் பின்னரான
அறிமுகத்தில்  மகள் பெயராய்
என பெயரின் பின்பாதியை
அவன் சொல்ல ..

விக்கித்த எனக்குள் அவன் கண்களில்
காதல் தெரிவதாய் தோன்றுவதை
மாயமென யாரேனும் உரைத்திடுங்கள்..
இப்பிறவியில் பிழையின்றி
செத்துப் போகிறேன்!!!

Sunday 1 January 2017

யாரோ அவன்? யாரோ அவன்?!!!!

விடியலில்லாத இரவை
வேண்டும் குறும்புக்காரனவன்!!

என் அழுகையிலும்
என் வலியிலும்
என் பயத்திலும் கூட
தனக்கான காதலை
முன் பதிவு செய்திடுவான்!!

எங்கிருந்தாலும் எனைப்
பார்க்கும் அந்த வான்நிலவாய்
என் வாழ்வில் அவன்!!

நான் ரசிக்கும் யாவிலும்
இன்னொரு பரிணாமம்
காணும் வித்தைக்காரனவன்!!

தள்ளி நின்றே
எனை இறைத்திடும்
கேணி சகடை அவன்!!

காரணமாய் அவனே  இருப்பினும்
நீயில்லை என்ற என்
ஒற்றை பொய்யில்
ஆயிரம் உண்மை
கான்பவனவன்!!

அவன் அவனாய்
நான் நானாய்
இல்லாமல் போகச்செய்யும்
அந்த புலப்பாடா உறவிற்கு
பெயர் வைக்க
என்ன அவசரம் இப்பொழுது
இருந்துவிட்டு போகட்டுமே
பெயரில்லா குழந்தையாய்!!!!!