Thursday 5 April 2018

பங்குனி ஈரம்😍

குண்டு உடம்பை சிரமப்பட்டு நகர்த்தி அடிப் பிரதட்சனம் பன்னும் உஷாக்கா..

முதுகில வருசந்தவறாம புள்ளைய தொட்டில் கட்டி அக்னிச் சட்டி எடுக்கும் பூரணியக்கா...

மந்திரம் போல பிராத்தனையை முணுமுணுத்தவாறு கொடிமரத்தில் தண்ணி ஊற்றும் கமலாக்கா..

இந்த அதிகாலைலயே கடைச் சாவிய அம்மா காலடில வச்சித் தாங்கனு சொல்லி கைய மேல தூக்கி பரவசத்தோடு கண் கலங்கும் அண்ணாச்சி..

கோயில் சுவரெங்கும் கணீர் குரல் எதிரொலிக்க பாட்டுப் பாடியபடியே சுத்தி வரும் மகேஸ்வரி பாட்டி..

கல்யாண கனவை கண்ல இருத்தி வச்சு... நீள் கூந்தல முன்னாடி போட்டபடி நெய் விளக்கேத்தும் கயல் பொண்ணு...

அதிகாலை கோயில் நிகழ்வுகளை இப்படி சுவாரஸ்யமாக்கும் இந்த பங்குனிப் பொங்கலை தூணில் சாஞ்சு ஈரமேறும் தரையில் உட்காந்து ரசிச்சு பாக்கைல தோணிச்சு .... தலை மேலிருந்து வழியும்  நீரில் மூக்குத்தி ஜொலிக்கும் மாரியம்மாவும் எவ்ளோ ரசனைக்காரினு..