Tuesday 19 June 2018

என் பிரிய பட்டாம்பூச்சியே..

உன் கைச் சிறைக்குள் அகபடாததாய் எக்களித்துக் கொள்ளும் வேளையிலெல்லாம் தளர்ந்தது போல ஒரு பாவனை செய்வாயே... அப்போதெல்லாம் ஓடி அணைத்து உன் மூச்சை முத்தமாக உறிஞ்சிட உதடுகள் தவித்துதான் போகும்..

அழிச்சாட்டியம் பன்னாது உன் அணைப்பில் நுழைவதில் சுவாரஸ்யமிருப்பதில்லை.. அதன்பின்னரான உன் அணைப்பில் சாத்வீகமும் தெரிவதில்லை..

சிந்திய மழைத்துளி யாவும் முத்தாவதில்லையே ... முத்தாகிடாதததால் அவை மதிப்பில்லை என ஆவதுமில்லை..

அள்ளி குடிக்கும் பாவனையில் உன் முகமேந்தி முத்தங்கள் விதைக்கிறேன்.. ஆனால் நானே  அறுவடை ஆகும் அதிசயத்தை நீ நிகழ்த்தி விடுகிறாய்...

இதோ தயாராகி விட்டேன் உன்னோடு ஓர் கண்ணாமூச்சி ஆடிட... விரைந்து வா..சிறகு விரித்து...❤

Tuesday 5 June 2018

ஈரக்காடுகள்.. நனைக்கும் நினைவுகள்....

பிரையண்ட் பூங்கா.... விரித்திருந்த போர்வைக்கு மேலாக லேசாக ஏறிய ஈரம் ஏதோ சிலிர்ப்பை ஏற்படுத்த.. ஆங்காங்கே சிதறியிருந்த செல்ஃபி மோக ஜோடிகளை  ரசிக்க ஆரம்பித்தேன்..

இரண்டாய் பிரிந்து வளர்ந்திருந்த மரத்திடையே நின்றும் சாய்ந்தும் மரத்தை பிளக்கும் தோரணையிலுமான ஃபோட்டக்களை சிரிப்பை அடக்கியவாறு பார்த்துக் கொண்டிருக்க... பூவாளி தூறலாய் வானம் தண்ணீர் இரைக்க ஆரம்பித்தது...

நனைத்தும் நனைக்காமலுமான ஒரு சாரல் மழை..... அதனூடே கால் வலிக்க ஒரு மணி நேர வேடிக்கை பார்த்தவாறே நடை... என்னவோ மனம் தூண் பாறை பார்த்தே ஆக வேண்டுமென உத்தரவிட கார் பயணம் ஆரம்பமானது...

இப்போது மழை வலுக்க ஆரம்பித்திருந்தது... உள்ளங்கை சில்லென சிலிர்க்க... மனம் கோர்த்திட  அவன் விரல் தேடியது...  நனைந்த பைன் மரங்கள் யாவும் தலை குளித்து ... திறந்த மாரோடு நிற்கும் அவனாக தோன்றியதில் ஆச்சரியமில்லாத ஆச்சர்யமாகிப் போனது...

ஈரக்காடுகள்.. நனைக்கும் நினைவுகள்....

தூண் பாறை இரண்டும் கழுவி விட்டாற் போல பளிச்சென தெரிய... பேரிரைச்சலோடு பெருமழை இப்போது வலுத்திருந்தது... போதாதற்கு காற்றும் கைகோர்க்க...  உயிர்வரை சிலிர்த்து சில்லிட்டது...

மீண்டும் மீண்டும் அனத்திக் கொண்டேயிருந்தேன்... இதோ இப்போது இங்கே நான் ...நான்... முழுவதும் நானாக நான்... பிறப்பின் அர்த்தம் நொடியளவேனும் உணர்ந்திருந்தேன்...

காயாதிருக்கட்டும் மகிழ்ந்திருந்த இப்பொன்கனங்கள்...

#பிறந்தநாள்_ஸ்பெசல்