Thursday 29 December 2016

ஏன்டி என்னைப் பிடிக்கும்?

கேட்பதற்கான எதுவும் இல்லாமல் போகும் ஓர் நிலையில் அழைத்துவிட்டு விழித்து பார்தது எச்சில் விழுங்கி வழிந்த நிலையில் "ஐ லவ் யூ டி"  என்ற உன் கிறுக்குத்தனமோ...

         என் எதிர்பாராத முத்தம் கிடைத்த குடும்ப நெரிசலில் காமம் வழியும் அந்த காதலை  மறைக்க நீ புரியும் பிரம்மயத்தனமோ...

                      தூக்கம் வராத ஓர் நல்லிரவில் கிலி பிடிக்கச் செய்யும் உன் இறுக்கிய பிடியில் கிளம்பிய என் கூவலில் விழித்து பார்த்த மகளிடம் உன் சமாளிப்போ...

             என் விழி தீண்டலில் தூரமாய் நின்ற ஒரு பொழுதில் வெட்கம் மறைப்பதாய் உன் கேசம் கலைத்து உதடு மடித்து இறுக கண் முடி பின் திறந்து உதடு கடித்தவாறு ஒரு கண் மூடிய உன் அபிநயங்களோ...

                 என் இயலாத  அந்த நாட்களில் மடி சாய்ந்த ஓர் கணத்தில் கிளம்பும் ஆண்மையை ஓர் நெற்றி முத்தத்தில் அழகாய் கையாள்வதோ...

எதைத்தானடா சொல்வேன் உனக்கான என் காதலின் காரணமாய்????!!!!
            
          
                

Wednesday 28 December 2016

காதல்! காதல்! காதல்!!!!!


தீர்ந்துபோகும் பிறவிக்குள் தீராக் காதல் புரிய உன் புன்னகையே போதுமானது..காதலென்ற கலையில் உன்மத்தம் காணல் உன்னாலயே சாத்தியமாகிறது..

           என்  இமைகூடும் வேளையில் எல்லாம் இமைக்கவுமின்றி என் விரல் சொடுக்கெடுத்து பிஞ்சு விரலோ .. குமரியின் விரலோ வென கவிதை பிதற்றுகையில் பேரழகனாய் என்னுள் கொள்ளை போகிறாய்..

               பாதமும் பற்றுமாம் காதல்.. அங்கே பற்றாமல் பற்றுமாம் காமம் ... சாத்தியமாக்கி விடுகின்றன
யாவற்றையுயும்... உன் சிறு கண்அசைவும் உதட்டுக் குவியலும்..

         வகுத்து எதையும் கையாள்வதில்லை நீ.. ஆனால் நீ கையாள்வதற்குள் என்னை வகுத்துக் கொள்கிறேன் நான்..
    
            சர்வமும் நீ என சொல்லிச் சொல்லியே ஆள தந்துவிட்டேன் என்னை.. ஆட்சி செய்வதான உன் தோரணையில் உனக்கு சர்வமும் நானாக ஆனதை உணராததான
உன் பாவனை புரிதலின் உச்சகட்டம்..

            காணாத தவிப்பை வார்த்தைகள் சொல்வதில்லை எப்போதும் ..என் இல்லாமையில் நீ கலைத்து போடும் என் சேலைகள் சொல்லும் மொத்தமும்...

           ஒரு முறையேனும் வாய்ப்பு தா தவறு செய்ய.. மன்றாடி மன்னிப்பு  கேட்க வேண்டும் உன்னிடத்தில்.. அதற்கு பின்னரான உன் அணைப்பில்
கரைந்து போகும் வரம் காண.. 

         மீண்டு வரப் போகும் பிறவிக்காக காத்திருக்க பொறுமை இல்லை .
செய்துவிடு மொத்த காதலையும்.. பிறவி மிச்சமின்றி செத்துப் போகிறேன் ..

# பாரதி கண்ணம்மா

           
        

Monday 19 December 2016

குட்டி கதை

ஞாயிறு ஸ்பெசலாய் மட்டனை உள்ளே தள்ளி ...கும்பகர்ண தூக்கம் போட்டு...விழித்து...அரைகண் மூடிய நிலையில் நிமிர்ந்து பாக்க... அவள் தரையில் கால் நீட்டி சோபாவில் சாய்ந்து கொண்டு.....மகளுக்கும் மகனுக்கும் ஹோம்ஒர்க் சொல்லிக் கொடுத்தவாறு பூ தொடுத்து கொண்டிருந்தாள்..
       எனக்குப் பிடித்த சேலையில் லேசாய் கலைந்த தலையோடு....முகத்தில் விழும் முடியை ஒதுக்கியவாறு....ஒருமுகமான வேலையில் குவிந்த உதடுகளோடு.... அழகாய் இருந்தாள்....
       படித்த முடித்த செல்லகுட்டி...கதை சொல்ல சொல்லி அம்மாவை நை நை னு அரிக்க ஆரம்பித்தாள்
கதை சொல்ல வேணும்னா மூனு மூனா ஜாதிப்பூவை எடுத்து வைக்கனுங்கிற கண்டிசனோடு அவள் கதை சொல்ல ஆரம்பித்தாள்....
         கண்ணனின் லீலைகள் கதைகளாய் கண் முன் விரிய செல்லகுட்டி ஆர்வமாய் கேட்கலானாள்....பிஞ்சு ரோஸ் விரல்கள் பூவை எடுத்து வைக்க....நீள் வெண்டைவிரல்கள் வாகாய் அதைத் தொடுக்க.....நான் அவளறியாமல் ரசித்துக் கொண்டே கண் சொக்கிக் கிடந்தேன்...
          பெண்கள் குளிக்கையில் கண்ணன் உடைகளை திருடிச் சென்ற இடம் வருகையில் ...செல்லகுட்டிக்கு சந்தேகம் வந்திட்டு....திருட்டுதனமானா என்னமானு கேட்டாள்.....
       "நாம பேசுறத தூங்கிற மாதிரி நடிச்சுகிட்டே படுத்துகிட்டு கேட்டிட்ருக்காருல அப்பா அது தான் திருட்டுதனம்" னு அவ சொல்லவும் ....இரண்டு குட்டீசும்....."ஐஐஐஐ...அப்பா கப் ஐஸ்" னு கத்திட்டு மேல வந்து விழுந்தாங்க....நா விழித்தவாறு அவள பாக்க....கண்ணடித்து சிரிக்கிறாள்....ராட்சசி....
         அழகான ராட்சசி.......

நாவடக்கம்

அலையில்லாத
கடல் இல்லை....
தடுமாறாத
சிந்தை இல்லை....
மனிதம் குமைந்து
மிருகம் விழித்தெழ வாய்ப்பாக....
சொற்கள் பிரசவிக்க கொள்ளும்
கரு சேரும்
விந்தின் தரமே
அமைவு கொள்கிறது....

வில்விடுத்து புறப்படும் அம்பெல்லாம்
உயிர் கொய்வதில்லை....
இதழ் விடுத்து செல்லும்
சொற்கலெல்லாம்
காருண்யம் பேசுவதில்லை...

ஓசை பிரித்து
மொழியாக்கும் நாக்கிற்கு
தெரிவதில்லை
வார்த்தைகளின் வலிமை....
அது தான
எலும்பில்லாததாயிற்றே.....

இருப்பினும்
தடுமாறும் சிந்தை வழி
சிதறும் மொழிக்கூற்று
சிற்சிலரின்
மனிதம் கொன்று...
மிருகம் உண்டு....
வாழ்க்கையில் பிழை
என்பது அற்றுபோய்
வாழ்க்கையே பிழையாய்...

#நாவடக்கம்

அவன்!!!

துருப்பிடித்ததாய்
உணரச் செய்கிறாய்
நீ இல்லா சூனியங்களில்...

விருப்பும் வெறுப்பும்
அற்றுப் போய்
வளியில் பயணிக்கக்
கற்றுத் தருகிறாய்
உன் நெருக்கங்களில்...

சிறைபிடிக்கா உன்
அன்பிற்குள் கைதியாக
விழைகிறேன்
கோலத்திற்குள்ளான
புள்ளியாய்...

நிஜமென்றும்
நிழலென்றும்
இல்லாமல் இயல்பாய்
மட்டுமே பிழையில்லா
காட்சியாகிறாய்...

சுகிக்கும் வார்த்தைகளின்றி
தைக்கும் ஊசிப்
பேச்சையும் இதழுக்குள்
மறைத்து வைத்திருக்கிறாய்...

வில்லென புறப்படும் அவை
காயப்படுத்தும் முன்
மருந்திட்டு விடுகிறாய்...

கலவையாய் வாழ
கற்றுத் தருகிறாய்...

அழுதும் சிரித்தும்
ரசித்தும் ஆர்ப்பரித்தும்
கொண்டாடியும்
உன்னில் கரையும் என்னை
எதுவாகவும் இல்லாமல்
அதுவாகவே ஏற்றுக்
கொள்கிறாய்....

விகிதாசாரம்

சொடுக்கெடுப்பதாய்
விரல் பிடித்து....

கிலோ கணக்கில்
காதல் தந்து..

கிராம் கணக்கில்
வெட்கம் பெறுகிறேன்!!!

இதென்ன விகிதாசாரமோ??!!!!!

#திருடி...

முரண்

எங்கள் இல்ல முதல்
காதல் கலப்புத் திருமணம்...
அத்தை மகன்
அரங்கேற்றினார்...
அவள் ....
ஹேமா அக்கா
எப்பவுமே உதடு
காக்கும் லிப்ஸ்டிக்...
பின்னப்ப்படாத கூந்தல்..
நுனிநாக்கு ஆங்கிலம்..
மாடர்ன் உடைகள்...
விதிவிலக்காய் தெரிந்தாள்...
குடும்ப விழாக்களில்
பிரத்யேகமாய்
கவனிக்கபடடாள்...
பின்னொரு நாளில்
பிள்ளைபெத்த
பச்ச உடம்பாய்
நான் கட்டிலில் கிடக்க
என் மகளை
உச்சிமுகர்ந்து
சிலபல ஆயிரங்களை
அவள் கையில்
திணிக்க முயன்று
ஈரம் கசியும் கண்ணோடு
விலகிய போது
இருமுறை அபார்சனில்
பெண்பிள்ளை ஆசையை
கனவாய் தொலைத்த
சாமானிய ஹேமா அக்கா
மட்டுமே மிச்சமாய்
தெரிந்தாள்!!!!

என் அழகன்

விதிகளை மீறுதலே
கொள்கையாக்குகிறாய்..
தேவையான போது
விலகிச் செல்கிறாய்...
நெருங்குகையில்
தள்ளி வைக்கிறாய்...
பிடித்ததை தர
மறுக்கிறாய்...
எதிர்பாராமல்
உள்ளம் நிறைக்கிறாய்...

சிவந்த மருதாணி
காட்டி நிற்க
முதுகு காட்டுகிறாய்...
பின்னொரு வேளையில்
விரல் முகர்ந்து
சிரிக்கிறாய்...
தலை நிறைக்கும்
பூவோடு வருகையில்
அசுவாரஸ்யம் காட்டுகிறாய்...
காதோர ஒற்றை
ரோசாவில்
கிறங்கி வழிமறிக்கிறாய்...

அரைத்த மசாலாவிலான
மீன் குழம்பை
கொறித்து வைக்கிறாய்...
உரை ஊற்றிய
கெட்டி தயிரை
அமிர்தமென்கிறாய்...

உன்னுடனான என்
பயணம்
முரண்களின்
தொகுப்பாயினும்..
ஆரவாரத்துடனே
எனை அழைத்துச்
செல்கிறது!!!!

#அழகா!!!!

வேண்டுமோர் ஆலிங்கனம்

நிலையில்லா வாழ்வில்
மொழியில்லா உன் அன்பு...
திகட்டாததாய்...
கூத்தாடுகிறாய்...
கொண்டாடுகிறாய்...
வளியில்
பயணிக்கிறாய்...
இருளில் ஒளிர்கிறாய்...

மழையில் காய்கிறாய்...
வெயிலில்
நனைகிறாய்...
ஒரு சொல்லில்
ஆயிரம் உணர்த்துகிறாய்...

நீ நானாகவும்
நான் நீயாகவும்...
ஈருடலை ஓருடலாக்கி
ஓருயிராக
ஆலிங்கனம் செய்கிறாய்...
என்னில் உன்னை
நிறைத்து  "நான்"
அழியச் செய்கிறாய்...

நீயும் நானும்
நாமாகிப் போதல்
இலக்கண பிழையில்லாமல்
நிகழ
இன்னொருமுறை
வேனுமடா உன்
ஆலிங்கனம்!!!!!!

உலகம் வெல்

என் பேரன்பு நீ!
என் மனமும் நீ!
மனமெல்லாமும் நீ!
உனக்கான பாதையில்
நீ போய்தான்
தீர வேண்டும்...

என் பாசமெனும் விலங்கால்,
உன்னை கட்டுண்டு,
கிடக்கச் செய்யப்போவதில்லை..
என் கண்ணீரால்;
உன் இறகை ,
நனைக்கப் போவதில்லை..

உன் சுயம்,
தனித்து விழிக்கட்டும்!
தனக்கானதை உணர்ந்து
அறியட்டும்!
தூங்கும் திறமைகள்
சீறி வெடிக்கட்டும்...!!

நீ நீயாக வாழ்!!!
கிளை பரப்பு!!!
உனை உணர்த்து!!!
உலகம் வெல்!!!

ராட்சசி

திரிந்து போன
சொற்களால் உண்டான
காயத்திற்கு...
முட்டும் கண்ணீர்
அடக்கி ஆழ்மூச்சிழுத்து
தாங்கமாட்டாது
பெரு மூச்சுகளால்
மருந்திட்டு விடுகிறாள்..
சிரித்துக் கொண்டே
எண்ணிக்கை
சரிபார்க்கிறேன்....

#ராட்சசி....

நட்பதிகாரம்

மனுசத்தனம் சாகாத
சக உறவாய் ...
நீ உன்னை
நிரப்பிவிடுகிறாய்
என் பொழுதுகளில் ..

கரைந்து போகா
வாசமொன்றை அவை
பிரத்யேகமாய்
வைத்திருக்கின்றன..

என் மகவுகான
என் அமுதைப் போல்....
பரிசுத்தமாய்!!!!!!!

#நட்பதிகாரம்

Wednesday 14 December 2016

இது தான் நான்!!

தளை சீர் அடி
விருத்தம் எதையும்
அறிந்ததில்லை...

கவிதையின்
இலக்கணமும்
கற்றதில்லை.....

பாரதியும் மிகப்
பிடிக்கும் .. .
வசீகரனும்
நெஞ்சினிக்கும் .....

இது இது
இன்னதென்று
பகுப்பதில்லை....
பிடித்த வரிகள்
எங்கிருந்தாலும்
ரசிக்காமல்
விடுவதில்லை.....

குழப்பமாகவும்
எழுத பிடிக்கும்
குழம்பிய குட்டையில்
கவிதையும் வடிக்கத்
தெரியும்.....

முகமன் கூறி
நீவிர்
வரவேற்றாலும் சரி
கழுவி கழுவி
ஊற்றினாலும் சரி
என் பணி
இனிதே தொடரும்......

என்றும் மனம்கவர்
தமிழுடன்
பாரதி கண்ணம்மா!!!!!!!!!!

Monday 12 December 2016

என்னவன்

என்னருகே அவன்
ஓரிரு நிமிடங்களில்
என்னவனாகப் போகும்
அவன்...!!!

மாலையிட்ட கழுத்து
முகம் நிறை புன்னகை
கண்கள் நிறை காதல்
கண்ணோர கள்ளப்பார்வை

வயிற்றில் பட்டாம்பூச்சி
குறுகுறுக்க
காத்திருந்த நிமிடங்கள்
உறைந்து நிற்பதாய்
அதீத பிரமை...

தோள் உரசும்
தருணமெல்லாம் உயிர்
பற்றி எரிய
இவனே அவன்...
"என்னவன்" என
உள்ளம் பிதற்றியது...

முகப்பூச்சுக்கும் மேல்
சிவக்கும் கன்னம்..
தோழியரின் எள்ளலில்
கன்றிபோனது எனலாம்...

நிச்சயித்தநாள் முதல்
காதல் பழக
எத்தனித்த மனம்
இன்று
அவன் வாசத்தில்
சுவாசிக்கிறது...!!

யாரோவாய் இருந்தவன்
இன்று
யாதுமாகி நிற்கிறான்..!!!

காதல் என்னை
தொட்டதாய் உணரவில்லை...
அவனுடனான அன்றைய
பொழுதில் உணர்ந்த
பாதுகாப்பிற்கு நான்
காதல் எனப் பெயரிட்டதில்
பாதகம் வந்துவிடப்
போவதில்லை...!!!

தோள் பிடித்து.. கண் பார்த்து..
கைப்பிடித்து...விதவிதமான
ஒப்பனைகளில்
நிழற்படம் சிறு பேழையில்
சேகரமாக ...இதோ
அவன் என்னுள்
முழுமையாய்
நிறைந்து விட்டான்....

Tuesday 6 December 2016

சுள்ளிகளின் கதறல்

தோரணமாய்தான் இருந்தது
அம்மா வீட்டுத் தெருவுக்கு
இரண்டு பக்கமுமான
அந்த வேப்பமரங்கள்..
அந்தி சாயும் வேளையில்
அதிலடையும் பறவைகள் சத்தம்
கவிதை உலகை
களைகட்டச் செய்யும்...

எதிர்தெரு மாரிச்சாமியின்
இரட்டைகிடா முறுங்கிய
கொம்புகளோடு அகத்திக்குலை
அசைபோட்டவாறு எப்பவும்
அதுலதான் கட்டிக்கிடக்குங்க...

வெயில் காலத்தில
தர்பூசணியும் பலாச்சுளையும்
பதனீரும் நுங்கும்
அதில கடைபோட்டுதான்
கிட்ணன் வியாபாரம் செய்வான்...
குடைரிப்பேர் சுப்புவுக்கும்
அதான் வியாபார ஸ்தலம்..

சைக்கிள் மிதித்து
மேடேறும் பலருக்கும்
ஆசுவாச ஸ்தலமும்
அதுவாகத்தானிருந்தது...

நகரின் விரிவாக்கத்தில்
அம்மா வீட்டுத் தெருவும் அதன்
அடையாளத்தை இழந்தது...
மரம் இருந்த இடத்தில்
முறிந்த சில குச்சிகள்
மட்டும் காய்ந்து கிடக்க
இம்முறைத் தாய்வீட்டுப் பயணம்
நெஞ்சில் பாரமேற்றி வைத்தது...

ஒவ்வொரு முறையின்
புறப்பாடுகளில் மினிபஸ்
காத்திருப்பில் மரங்களின்
நிழற் காய்ந்த ,
என்னைப் பார்த்து
காய்ந்த சுள்ளிகள்
ஏதோ சொல்லி அழுகிறதே
இது மாயை என என்னால்
ஒதுக்க முடியவில்லையே
ஏனோ!!!????

மசக்கை ஏக்கம்

உள்தள்ளிய நீரையும்
வெளிதள்ளிடும் மசக்கை...
இருவருட தாம்பத்தியத்தின்
பரிசு _ வயிரை நிறைக்க
குடல் தள்ளும்
வாந்தியும் சுகமாகவே
தோன்றிற்று...
வீடாறு மாதமும்
கடலாறு மாதமுமாய்
என்னவன்...
மசக்கை எனையாள
கரை கடந்தவன்
இதோ நிரையேழு
மாதத்தில் எனைத்தாங்க
வந்தே விட்டான்...

பார்லியும் சுரைக்காயும்
கைகொடுக்க நீர்
சரியாய் பிரிந்தாலும்
உப்பிசமாய் பளபளத்த
கால்கள் அவன்
விரல் நீவலுக்காய்
தவமே இயற்றிற்று...
பாரம் தாங்காது
இழுத்துவிடும் பெருமூச்சுகள்
அவனைப் பார்த்ததும்
இயல்பாயிற்று...

கால்நீட்டி அமர்ந்து
பின் எழுகையில் எல்லாம்
இடதுகையா வலதுகையா
ஊனப்படுவதெது என
இருபாட்டிகளும் வேடிக்கை
 பார்க்க
தூக்கி விட
அவன் வரும் காலம்
எதுவென
உள்ளம் ஏங்கிற்று...

பிரிவிற்கு பின்னரான
கூடலை எல்லாம்
கவித்துவமாய்
பதிவுசெய்ய ஆசை
எல்லாம் வெறி
கொண்டலைய
செல்பிக்களால் எங்கள்
உலகம் நிறமாறிற்று...

முற்றோதலையும்
சிவபுரானத்தையும்
இளையராஜாவையும்
ரசிக்க கற்ற
என் செல்லம்
செல்பிக்கும்
முகம்காட்ட
 கருப்பைக்குள்
கற்றாயிற்று!!!!!!

கடலாறு மாதம் காண
எம்தலைவன் செல்லும்
பின்னொரு
கோடை காலத்தில்
எங்களுக்கான
ஏங்கங்கள்
பற்றாய்(debit) வைக்கப்படும்
அவன் வரவால்
வரவாகும்(credit) வரை!!!!

மனிதம் மறிக்கவில்லை

புது பஸ்ஸ்டான்டுக்கு போனா ஆட்டோக்கு 150 ரூவா அதனால சாத்தூர் போய் அங்கிருந்து திருமங்கலம் போலாம்னு முடிவு பன்னி மகனிடம் சம்மதம் கேட்க, 150 ரூவா அவன் பர்சுக்கு என பேரம் முடிவானது..
               ஒரு வழியா திருமங்கலம்  போய் இறங்க..அங்க தேனி பஸ்  உடனே இருக்க அதில் ஏறினோம்.. அப்போ  காது வளர்த்து தண்டட்டி போட்ட பெரியாத்தா ஒன்னு வேகமா பஸ்ல ஏறிச்சு.. ஜாக்கெட் போடாது கறுஊதா நிற சுங்கடி சேலை கட்டியிருந்திச்சு.. " ஏலா நாசமா போறவளே வேகமா வாடி" னு யாரையோ திட்டி கூப்பிட நான் எட்டி பார்த்தேன்.
              40 வயதான பெண் மனநிலை சரியில்லாத ஒரு16 வயசு பொண்ண கூப்பிட்டு ஓடி வந்து ஏறினாங்க..அவ அவங்க மகள் போல.. அவங்க முன்ன ஏறிட்டு அந்த பொண்ண கைப்பிடிக்க அவள் படிகளில் கால் மாற்றி வைத்து கீழே விழுந்து விட்டாள்.. பல் வெட்டி உதட்டிலிருந்து ரத்தம் வழிய பாவம் அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.. பெரியாத்தாவிற்கு அந்த 40 ல் இருந்த பெண் மருமகள் போல.. அது பாட்டுக்கு அவங்கள திட்ட... அந்த பெண் மகளை ஏற்றி ஒரு
 சீட்டில் உக்கார வச்சாங்க..
                கண்ணில் நீர்வழிய சேலை தலைப்பாள் வழியும் ரத்தத்தை துடைச்சு விட்டாங்க. பெரியாத்தாவின் அர்ச்சனை மட்டும் ஓய்ந்தபாடில்லை.. அப்பதான் அந்த மீசைக்கார பெரியவர் ஒரு அமட்டு போட்டார் பெரியாத்தாவ.. அந்த புள்ளைய அழாத தாயினு தேத்தி தன் தோளில் கிடந்த துண்டால் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டபடி.. "ஏய்யா கண்டக்டர் தம்பி இந்த கிழவி இனி வாய தொறந்திச்சுனா கீழ இறக்கி விடுயா" னு சொல்லிட்டு  யாராச்சும் தண்ணி தாங்கப்பானு கேட்டார்..பெரியாத்தா அதுக்கப்பறமா வாயே தொறக்கல...
          நான் தண்ணி பாட்டில் தர அதை வாங்கி அந்த புள்ளைய குடிக்க வச்சி மூஞ்சி கழுவி விட்டார்.. அவ அழுகைய நிப்பாட்ற வரை கூடவே இருந்திட்டு ..பன்னிகுன்டு ல அந்தப் புள்ளைட்ட சொல்லிட்டு இறங்கி போனார்.. அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில்  அந்த பெண்மணியும் மகள் மாமியாருடன் இறங்கிப் போய் விட்டார் ..
அது வரை வேடிக்கைப் பார்த்த அந்த கூட்டத்தில் நானும் ஒருத்தி என்ற உண்மை உறைக்க வெட்கமாக உணர்ந்தேன்...
        அநத பெரியவர் போல சிலர்  தான் மனிதத்தை உயிர்ப்பித்து நம்பிக்கை என்ற விதையை  நமக்குள் விதைத்து வருகிறார்கள் ...

Thursday 1 December 2016

சொந்த வீடு

சின்னபுள்ளைல இருந்து
வரும் கனவு...
சொந்த வீடு...

சேத்து வச்சு காசும்
பேங்கு தந்த லோனும்
கட்டடமா உசர
மண்ணும் செங்கலும்
உருவங்கொண்டாச்சு...

வானம் தோண்டின
மாசில இருந்து
கிரஹபிரவேசம் பன்னிய
ஆவணி வரை
மண் வாசமும்
சிமெண்ட்டு வாசமும்
சுவாசமாச்சி...

இங்க உக்காந்துதா
காபி குடிக்கோனும்...
இங்கன படுத்து தான்
பவுர்ணமி நிலாவ பாக்கோனும்...
பால்கனில நின்னு
காத்து வாங்கோனும்..
ஆசைகள் சேமிப்பாக..
சேமித்த பணமுல்லாம்
என் வீடாச்சு..

நா பெத்த மூணாவது
பிள்ளையா..
என் கண் முன்னே
வளரலாச்சு...

இப்பவும் அந்த
மாடியேறும் கடைசிபடி
உக்காந்து காபி குடிக்கிற
நேரமெல்லாம் என்
மூணாவது பிள்ளை
மீந்து போன
பெயின்ட் வாசனையோட
ஏதாச்சும் சேதி
சொல்லிட்டுதான் இருக்கா!!!!

நட்பு

சேனல் மாத்தி மாத்தி வீட்டம்மா சீரியல் பார்க்க பாதி படித்த விகடனை மூடி வச்சிட்டு என் ரெகுலர் வேலை பாக்க கூடையை தூக்கினேன் . சரவணன் மீனாட்சி ஆரம்பிக்க  என்னென்ன காய் வாங்கனும்னு வீட்டம்மாட்ட பட்டியல வாங்கி வெளில வந்தேன். நான் ஜெயபாண்டியன் சுருக்கமா ஜெ.பி .கவர்மன்ட் வேலை .வயசு48. ஒரே பையன் .பி .ஈ. இரண்டாவது வருசம் படிக்கிறான். எந்த சுவாரஸ்யமில்லாத செக்குமாட்டு வேலை .ஆனால் நிரந்திர வருமானம் . நிம்மதியான வாழ்க்கை.

              யோசித்தபடி செல்வம் காய்கறி கடைக்கு வந்தேன். வழக்கமான நைட்டி மேல துண்டு போட்ட நாலு பெண்கள். சிறிய கூட்டம் . அசுவாரஸ்யமாய் பார்வையை நகற்ற அவளை பார்த்தேன்.  வீட்டுக்காரருடன் வந்து வண்டியில் இறங்கினாள். நாற்பதிருக்கலாம் வயது. யாரையும் கவர்ந்துவிடும் களையான முகம்..

           சிரித்து பேசியபடியே காய் வாங்கினாள் . செல்வத்திற்கு நெடு நாள் பழக்கம் போல. வெண்டைக்காய் உருளைகிழங்கு வெங்காயம் தக்காளி னு அவள் கூடையை நிறைக்க நான் கண் நிறைக்க அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..

           அவளுக்கு உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ டக்குனு திரும்பினாள். ஒரு நிமிட விழிதீண்டல்... 18 ஆக உணர்ந்தேன் ... காசு கொடுத்து அவள் நகர்ந்து அந்த டிவி எஸ் எக்ஸலில்  வீட்டுக்காரரின் இடுப்பை சுற்றி கை போட்டு சட்டையை இறுக பற்றி அமர்ந்தாள். அவரும் ஸ்டார்ட் செய்தவாறு ஏதோ சொல்ல .. நாற்பதிலும் பெண்ணிடம் பூக்கும் வெட்கத்தை அன்று அறிந்தேன்.
 
              எப்படி காய் வாங்கினேன்.. எப்படி வீடு  வந்து சேர்ந்தேன் எதுவும் நினைவிலில்லை. ஒரு ஐந்து நிமிட கவணிப்பில் ஒரு பெண்ணால் இவ்வளவு தூரம் கவரப்பட்டோமே அதுவும் இந்த வயதில் என வெட்கமாக உணர்ந்தேன்..

             மறுநாளும் அதே நேரம்.. அதே கடை.. அதே பெண்... இன்றைக்கு வண்டியை அவளே ஓட்டி வந்தாள். கள்ளத்தனமாய் நான் அவளைப் பார்க்க காய் வாங்கி முடித்த அவளுக்கு ஏதோ போன் கால் வந்து விட்டது.. தள்ளி நின்று பேசினாள் ஏதோ கணக்கு ..ஐடி .. என்று . பேசி முடித்து போனை பர்சில் போட்டுவிட்டு ஏதோ தீர்மாணித்தவளாய் ஆழ மூச்சிழுத்து என்னை நேருக்கு நேராய் பார்த்து புன்னகைத்தாள்..

              மனதிலிருந்த சாத்தான் தூரமாய் போய் விழுந்தான். இப்பெல்லாம் அடிக்கடி அவளைப் பார்க்கிறேன். புன்னகையாலும் சிற்சில ஹலோக்கலாலும்  அந்த மனிதி என் சிநேகிதி ஆகிவிட்டிருந்தாள்.
              

மழை நியாபகங்கள்

கொட்டித் தீர்க்கும்
வெறியுடன் பெய்யும்
மேகத்தை சட்டைசெய்யாமல்
தூக்கிப் பிடித்த
அரைப் பாவாடையுடன்
வீட்டு முற்றத்தில்
குழி தோண்டி ..குளம் செய்து
கப்பல் விட்ட நானும் ராதாவும்...

ஓஹோ மேகம் வந்ததோனு
ரேவதி போல
மழைல சைக்கிள் ஓட்டி
ஜோதி அத்தை வீட்டு
ரோஜா தொட்டியை உடைச்சு
வாங்கிக் கட்டிக்கொண்ட
நானும் கவிதா மைனியும்..

சூப்பரா இருக்கும்னு
தேடிப்போய் சேமியா ஐஸ் வாங்கி
மழைல நனைஞ்சுகிட்டே தின்ன
நானும் சுந்தர் மச்சானும்..

மழைல நனையாம வீடு
சேர்க்கிறேனு வேகமா
சைக்கிள் ஓட்டி
என் காலை சக்கரத்தில்
மாட்டவச்சு இரத்தம் பாத்த
கண்ணமாமாவும்...

கம்பிகளுக்கிடையை வழியும்
இந்த மழைநீர்
மழைக்கால நியாபகங்களை
பிரத்யேகமாய்
உள்ளுக்குள் பரவச்செய்கிறது...

அவன் பார்வையில்

ஐ சூஸ் ஆல்வேஸ்
ப்ளூ லேடி
தோள் குலுக்கி தன்
பிராண்டு பெர்ப்யூம்
கிடைக்காத ஏமாற்றத்தை
உதடு பிதுக்கி
சலிப்புடன் சொல்பவளிடம்
எப்படிச் சொல்வேன்
அவள் வாசம்
எனக்குள் முழுவதுமாய்
அப்பிக்கிடப்பதை!!!!!!

Saturday 26 November 2016

தம்பியதிகாரம்

வகுத்திடும் இலக்கணம்
ஏதுமில்லை..
நம்மிடையே கணக்கு
வழக்கொன்றும்
பெரிதாயில்லை..

நானழுதிடும் தருணங்களில்
நீ நீர்க் கொள்கிறாய்
கண்களில்...
தவறிழைக்கும் வேளையில்
கண்டித்துவிட்டு
முதுகு கன்றுமளவு
என்னிடம் வாங்கியும்
கொள்கிறாய்...

நான் பிடுங்கித்
தின்னவெனவே
ஒரு பகுதி
ஒதுக்கி வைக்கிறாய்...
டியூசனுக்கு பின்னரான
என் தாமதிக்கும் வருகையில்
உயிர் பதைக்கிறாய்...

என் அலட்சியத்திலும்
உன் பிரியம்
செழித்து வளர்க்கிறாய்...

உனக்கான என்
பிரியங்கள் பின்னொரு
நாளுக்கென
அடைகாக்கப்படுவதை
நீ அறியாமலில்லை...
உன் அன்பும்
அளவிடப்பட்டு
செலவிடப்படுவதில்லை...

நமக்கான பகிர்தல்கள்
ஆயிரம் இருக்க,
நான் அக்கா வென்றழைக்க
முயன்றதில்லை...
நீயும் கேட்க
விழைந்தததில்லை...

              அன்பு குந்தானிக்கு
                      பிரியங்களுடன் உன்
                                உடன்பிறப்பு....