Sunday 13 March 2022

மசக்கை

உள்தள்ளிய நீரையும்
வெளிதள்ளிடும் மசக்கை...
இருவருட தாம்பத்தியத்தின்
பரிசு _ வயிரை நிறைக்க...
குடல் தள்ளும்
வாந்தியும் சுகமாகவே
தோன்றிற்று...
வீடாறு மாதமும்
கடலாறு மாதமுமாய் 
என்னவன்...
மசக்கை எனையாள
கரை கடந்தவன்
இதோ நிரையேழு
மாதத்தில் எனைத்தாங்க
வந்தே விட்டான்...

பார்லியும் சுரைக்காயும்
கைகொடுக்க நீர்
சரியாய் பிரிந்தாலும்
உப்பிசமாய் பளபளத்த
கால்கள் அவன்
விரல் நீவலுக்காய்
தவம் இயற்றிற்று...
பாரம் தாங்காது
இழுத்துவிடும் பெருமூச்சுகள்
அவனைப் பார்த்ததும்
இயல்பாயிற்று...

கால்நீட்டி அமர்ந்து
பின் எழுகையில் எல்லாம்
இடதுகையா வலதுகையா
ஊனப்படுவதெது என
இருபாட்டிகளும் வேடிக்கை
 பார்க்க
தூக்கி விட 
அவன் வரும் காலம் 
எதுவென
உள்ளம் ஏங்கிற்று...

பிரிவிற்கு பின்னரான
கூடலை எல்லாம்
கவித்துவமாய்
பதிவுசெய்ய 
ஆசையெல்லாம்
வெறி கொண்டலைய 
செல்பிக்களால் எங்கள்
உலகம் நிறமாறிற்று...

முற்றோதலையும்
சிவபுரானத்தையும்
இளையராஜாவையும்
ரசிக்க கற்ற
என் செல்லம்
செல்பிக்கும்
முகம்காட்ட
 கருப்பைக்குள்
கற்றாயிற்று!!!!!!

கடலாறு மாதம் காண
எம்தலைவன் செல்லும்
பின்னொரு 
கோடை காலத்தில்
எங்களுக்கான
ஏங்கங்கள் 
பற்றாய்(debit) வைக்கப்படும்
அவன் வரவால்
வரவாகும்(credit) வரை!!!!

டாட்டூ

சற்றே பெரிய கதை....

நான் கௌதம்..சென்னைல வேலை..கம்ப்யூட்டர் இன்ஜினியர்...இதோ லீவ் ல சொந்த ஊரு கோயமுத்தூருக்கு வந்திருக்கேன்...ஒரு முக்கியமான வேலையை இம்முறை முடித்தே சென்னை திரும்ப வேண்டும்னு முடிவெடுத்திருக்கேன்

     என் நிறைவேறாத காதலின் ஓர் அடையாளம் நெஞ்சில் டாட்டூவாய் உறுத்திக் கொண்டே இருந்தது..அதை ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டிடம் காட்டி அழித்துவிட முடிவெடுத்தேன்..

    ஊரின் பிரபல மருத்துவமனையின் டாக்டரிடம் டோக்கன் போட்டுவிட்டு காத்திருந்தேன் ...அப்பதான் அவங்களைப் பார்த்தேன்...

அம்மாவும் பொண்ணும்... நடுத்தர குடும்பமாய் இருக்க வேண்டும்...இருவருமே ஹோம்லி அழகு..பெண்ணிற்கு 17_18 வயதிருக்கலாம்..அம்மா பின் முப்பதுகளில் இருந்தார்..காத்திருந்த அனைவருமே மொபைல் நோண்டிக் கொண்டிருக்க.. இருவர் மட்டும் சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டே இருந்தனர்...

        எனக்கு ரொம்ப ஆச்சர்யம் ..அப்படி அம்மாவும் பொண்ணும் என்னதான் பேசுவாங்கன்னு...காத்திருந்து பொறுமை அற்ற நிலையில் மகள் எழுந்து ரிசப்சனிடம் விசாரிக்க...அடுத்ததாய் அவர் தான் என அவள் என்னை சுட்டி காட்டினாள்..
    
        அவள் ஸ்நேகமாய் சிரித்துவிட்டு அவள் முறை எத்தனாவதென விசாரித்துக் கொண்டிருந்தாள்..அழகிய முகம்.. ப்யூட்டிபார்லர் காணாத புருவங்கள்.. எலுமிச்சை நிறம்..... இயல்பிலேயே சிவந்த உதடுகள்...யாருடனும் ஸ்நேகமாகும் பாவம்..நீளமான கூந்தல்..நேர்த்தியான சுடிதார்..மொத்தத்தில் அம்சமாய் இருந்தாள்..

                எனைமறந்து நான் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு பெண் குழந்தையை இடுப்பில் வைத்தவாறு அவளை கடக்க அந்த குட்டி இவள் ஷாலை பிடிவாதமாய் பற்றிக் கொண்டு இழுக்க..முகம் கொள்ளா சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொஞ்சி பின் அதன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு நானிருக்கும் திசை பார்த்து சிரித்தாள்..

     ஒருகனம் இதயம் நின்று துடித்தது..அனிச்சையாய் என் தலை பின் திரும்ப என்னருகே அவள் அம்மா..அவ அவங்கம்மாவ பாத்து சிரிச்ருக்கா...இது புரியாத நான் வழிந்து வைக்க...அவள் இதழோர இளநகையுடன் ஒரு ஓரப் பார்வை பார்த்து அவள் அம்மா அருகே வந்து உட்காரவும் என் டோக்கன் நம்பர் அழைக்கவும் சரியாக இருந்தது...

           அவள் எனக்கு ஏதோ உணர்தினாள்.. என் பழைய காதலை டாட்டூவிலிருந்து மட்டுமல்ல என் மனதிலிருந்தும் அழிக்க என்னால் முடியும்னு அவளை நான் ரசிச்ச கனத்தில் உணர்ந்தேன்..

             டாக்டர பாத்திட்டு வெளில வந்தப்போ அவ அங்க இல்லை..பாத்தே ஆகனும்னு தோனல...ஆனா ஏதோ நிறைவா 
இருந்திச்சு .....