Sunday 13 March 2022

மசக்கை

உள்தள்ளிய நீரையும்
வெளிதள்ளிடும் மசக்கை...
இருவருட தாம்பத்தியத்தின்
பரிசு _ வயிரை நிறைக்க...
குடல் தள்ளும்
வாந்தியும் சுகமாகவே
தோன்றிற்று...
வீடாறு மாதமும்
கடலாறு மாதமுமாய் 
என்னவன்...
மசக்கை எனையாள
கரை கடந்தவன்
இதோ நிரையேழு
மாதத்தில் எனைத்தாங்க
வந்தே விட்டான்...

பார்லியும் சுரைக்காயும்
கைகொடுக்க நீர்
சரியாய் பிரிந்தாலும்
உப்பிசமாய் பளபளத்த
கால்கள் அவன்
விரல் நீவலுக்காய்
தவம் இயற்றிற்று...
பாரம் தாங்காது
இழுத்துவிடும் பெருமூச்சுகள்
அவனைப் பார்த்ததும்
இயல்பாயிற்று...

கால்நீட்டி அமர்ந்து
பின் எழுகையில் எல்லாம்
இடதுகையா வலதுகையா
ஊனப்படுவதெது என
இருபாட்டிகளும் வேடிக்கை
 பார்க்க
தூக்கி விட 
அவன் வரும் காலம் 
எதுவென
உள்ளம் ஏங்கிற்று...

பிரிவிற்கு பின்னரான
கூடலை எல்லாம்
கவித்துவமாய்
பதிவுசெய்ய 
ஆசையெல்லாம்
வெறி கொண்டலைய 
செல்பிக்களால் எங்கள்
உலகம் நிறமாறிற்று...

முற்றோதலையும்
சிவபுரானத்தையும்
இளையராஜாவையும்
ரசிக்க கற்ற
என் செல்லம்
செல்பிக்கும்
முகம்காட்ட
 கருப்பைக்குள்
கற்றாயிற்று!!!!!!

கடலாறு மாதம் காண
எம்தலைவன் செல்லும்
பின்னொரு 
கோடை காலத்தில்
எங்களுக்கான
ஏங்கங்கள் 
பற்றாய்(debit) வைக்கப்படும்
அவன் வரவால்
வரவாகும்(credit) வரை!!!!