Friday 14 September 2018

மகளுக்காக💗

தூங்கும் மகளை அருகே இழுத்து அணைத்துப் படுத்து முத்தமிடும்
அவன் அடுக்கடி நியாபகபடுத்தித் தொலைக்கிறான் ... அவள் விடுதி செல்லும் தினம் நெருங்குவதை...

இயல்பாய் அவளுக்கு பிடித்தவையாக செய்வதான என் போக்கை அவள் தம்பியும் கண்டும் காணாததாய் கடந்து செல்கிறான்...

விடுதி செல்வதாய் நெஞ்சில் பாரமேற்றி செல்லும் மகளை ஈர விழி நனைக்காத சிறகோடு பறக்கச் செய்திட ஆன மட்டுமாய் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றேன்....

சிறகு விரி மகளே... கொலுசொலி கேட்க பிற்பாடு பார்த்துக் கொள்கிறேன்...❤

Monday 3 September 2018

மகளுக்கோர் கடிதம்✉

என் பிரியமானவளே👱❤

கிழிக்கின்ற தேதித் தாள்கள் என்னை ஏளனம் செய்கின்றன. உன்னோடான நிஜங்களை அது மட்டுமே கொண்டதிருப்பதாய் என்னை கேலி பேசுகின்றன.

              அதற்கெங்கே என் நினைவுச் சேமிப்பின் கொள்ளளவு தெரியப் போகிறது . 

        நீ தூங்கும் வேளையிலெல்லாம் கன்னம் வழித்து முத்தமிட்டு ஆசைப் பெருக்கிக் கொள்கிறேன்.

        உனக்கெனவே தினம் பூக்கும் அந்த ஜாதி மல்லிக்கு உன் இல்லாமையை எப்படி உணர்த்துவேனடா .

       இருப்பின் மகிழ்வை சேமித்து வைத்திட புதிய மனக் கணக்கொன்றை வகுத்துவிட்டேன். வட்டியாய் சில முத்தங்களை அவை குட்டி போட்டால் எப்படி இருக்கும்😍.

        பதியனிடப்பட்ட என் ரோஜா செடியே புதிய மண்ணில் நீ செழிக்கப் போகும் அழகை காண என் கண்ணிரண்டையும் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

      நீ சட்டிப் பானை கொண்டு வா நான் அரிசி காய்கறியும் கொண்டு வருகிறேன் என நீ விளையாடிய விளையாட்டுகளும், கல்லூரியின் விடுதி வாழ்க்கையும் நீ எதிர் கொள்ளப்போகும் திருமண வாழ்க்கையின் ஒத்திகை தானே
என் தங்கமே...

  நீ வாழ்வதை நான் ரசித்திடுவதற்கான கடந்திடும் இந்த நாட்கள் சுமையல்ல பெரும் சுகம்..

            அன்போடு அம்மா..